மாணவியை தாக்க முயன்ற வாலிபருக்கு கத்திக்குத்து

மாணவியை தாக்க முயன்ற வாலிபருக்கு கத்திக்குத்து

Update: 2022-12-13 18:45 GMT

போத்தனூர்

காதலிக்க மறுத்த மாணவியை தாக்க முயன்ற வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

மாணவியுடன் காதல்

கோவை போத்தனூர் அருகே உள்ள பிள்ளையார்புரத்தை சேர்ந்தவர் ஜாபர் அலி (வயது 24) பெயிண்டர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 16 வயதான பிளஸ்-2 மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் தீவிரமாக காதலித்து வந்தனர். இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களது மகளை கண்டித்தனர்.

பின்னர் வீட்டை மாற்றி வேறு ஒரு பகுதிக்கு சென்றனர். இதையடுத்து மாணவி ஜாபர் அலியிடம் பேசுவதையும், பழகுவதையும் தவிர்த்தார். காதலிக்க மறுத்து விட்டார். இது ஜாபர்அலிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாணவி பள்ளி முடிந்ததும் சக மாணவிகளுடன் டவுன்ஹாலில் இருந்து தனியார் பஸ்சில் வீட்டிற்கு சென்றுகொண்டு இருந்தார்.

அப்போது அந்த பஸ்சில் ஜாபர் அலி இருந்தார். அப்போது மாணவி, ஜாபர் அலி குறித்து சக மாணவிகளிடம் கருத்து தெரிவித்து உள்ளார். இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த ஜாபர் அலி மாணவியை தாக்க முயன்றார். இதனை பார்த்த பஸ்சில் இருந்தவர்கள் அவரை சமாதானம் செய்தனர்.

2 பேர் கைது

மாணவி வீட்டிற்கு சென்றதும், அவரது தோழிகள் நடந்த சம்பவங்களை மாணவியின் தந்தையிடம் கூறினர். இதனால் தந்தைக்கு ஆத்திரம் ஏற்பட்டது. பின்னர் அவர் கத்தியுடன் ஜாபர் அலியின் வீட்டிற்கு சென்றார். அங்கு இருந்த அவரின் முதுகில் கத்தியால் குத்தி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றார். கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இது குறித்த புகாரின் அனைத்து மகளிர் போலீசார் பள்ளி மாணவியை தாக்க முயன்ற ஜாபர் அலி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைதுசெய்தனர். இதே போல் ஜாபர் அலி அளித்த புகாரின் பேரில் அவரை கத்தியால் குத்திய மாணவியின் தந்தை மீது போத்தனூர் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து அவரை கைதுசெய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்