நாகையில் களைகட்டி வரும் புத்தக திருவிழா
நாகையில் களைகட்டி வரும் புத்தக திருவிழா நாளையுடன்(திங்கட்கிழமை) நிறைவடைகிறது.
புத்தக திருவிழா
நாகை அரசு ஐ.டி.ஐ. வளாகத்தில் புத்தக திருவிழா நடந்தது வருகிறது. கடந்த 24-ந்தேதி தொடங்கிய இந்த திருவிழா நாளை (திங்கட்கிழமை) வரை நடக்கிறது. இந்த விழாவில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து 110 பதிப்பாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இதில் 114 புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கதை, கவிதை, நாவல், நாடகம், அறிவியல், அரசியல், சமூகம், தத்துவம், வரலாறு, உளவியல், சிறுவர் இலக்கியம், ஆன்மிகம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களும், தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் உள்ள புத்தகங்களும் இடம் பெற்றுள்ளன.
கலைநிகழ்ச்சிகள்
விழாவையொட்டி தினந்தோறும் மாலை 3 மணியில் இருந்து 6 மணி வரை மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. தொடர்ந்து தமிழ் அறிஞர்களின் கருத்தரங்கங்களும், சிந்தனையரங்கங்களும் நடந்து வருகிறது.இங்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் ஆர்வமுடன் வந்து ஏராளமான புத்தகங்களை வாங்கிசெல்வதால் புத்தக திருவிழா களைகட்டியுள்ளது.
இந்த புத்தக திருவிழா குறித்து மக்களின் கருத்துகள் வருமாறு:-
தன்னம்பிக்கையை ஏற்படுத்துகிறது
திருபூண்டி வடக்கு அரசு உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் துரைக்கண்ணன்:-
கல்வியில் பின்தங்கிய நாகை மாவட்டத்தில் புத்தக திருவிழா நடத்துவது முன்னேற்றத்திற்கான ஒரு தன்னம்பிக்கையை ஏற்படுத்துகிறது. வயதுக்கு தகுந்தாற்போல் இங்கு ஏராளமான புத்தகங்கள் உள்ளன.
மாணவி திவ்யா ஸ்ரீ:- நினைவாற்றல் சார்ந்த புத்தகங்கள், நவீன கால அரசியல் புத்தகங்கள், மறைக்கப்பட்ட வரலாறு சார்ந்த புத்தகங்கள், சாகித்திய அகடமி விருது பெற்ற புத்தகங்கள் ஏராளமாகஉள்ளன. இது தவிர போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்களும் இடம் பெற்றுள்ளன. இந்த அரிய வாய்ப்பை நாகை மாவட்ட மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.