குடியிருப்பு பகுதியில் 2 குட்டிகளுடன் உலா வந்த கரடி
குடியிருப்பு பகுதியில் 2 குட்டிகளுடன் உலா வந்த கரடி
கோத்தகிரி
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக கரடிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. மேலும் கரடிகள் வளர்ப்பு பிராணிகளை போன்று சாலைகள், தேயிலை தோட்டங்கள், குடியிருப்பு பகுதிகளில் உலா வருகின்றன. இவ்வாறு நடமாடும் கரடிகளால் மனித-வனவிலங்குகள் மோதல்கள் ஏற்பட்டு வருவதும் தவிர்க்க முடியாததாகி வருகிறது. மேலும் கரடிகள் உணவிற்காக குடியிருப்புகள் மற்றும் கடைகளை உடைத்து வருகின்றன.
இந்தநிலையில் கோத்தகிரி அருகே உள்ள கேசலாடா கிராம குடியிருப்பு பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஒரு குட்டியை முதுகில் சுமந்து கொண்டு மற்றொரு குட்டியுடன் தாய் கரடி அங்குள்ள ஒரு வீட்டின் சுற்றுச்சுவர் மீது நடந்து சென்றது. இதை கண்டு வீட்டில் இருந்தவர்கள் அச்சமடைந்தனர். அவர்கள் சத்தம் போட்டு கரடிகளை விரட்டினர். பின்னர் கரடிகள் அருகில் இருந்த தேயிலை தோட்டத்திற்குள் ஓடி சென்று மறைந்தன. தொடர்ந்து இந்த கிராமத்தில் கரடிகள் நடமாடி வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்து உள்ளனர். மேலும் கரடியின் நடமாட்டத்தை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.