குட்டிகளுடன் ஊருக்குள் வரும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்

கோத்தகிரி அருகே குட்டிகளுடன் ஊருக்குள் வரும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று வனத்துறைக்கு, பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2022-07-01 13:27 GMT

கோத்தகிரி

கோத்தகிரி அருகே குட்டிகளுடன் ஊருக்குள் வரும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று வனத்துறைக்கு, பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கரடிகள் நடமாட்டம்

கோத்தகிரி அருகே கன்னிகா தேவி காலனி உள்ளது. இந்த பகுதியில் கரடிகள் நடமாட்டம் தொடர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வனத்துறையினர் வைத்த கூண்டில் கரடி ஒன்று சிக்கியது. அந்த கரடி தலைகுந்தா பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு, அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டது. அதே மாத இறுதியில் கன்னிகாதேவி காலனியில் உள்ள ஒரு ஓடைக்கு அருகே மற்றொரு கரடி இறந்து கிடந்தது. இருப்பினும் கரடிகள் நடமாட்டம் குறையவில்லை. குடியிருப்புப் பகுதிகள் மற்றும் பேரூராட்சியின் வளம் மீட்பு பூங்கா பகுதிகளில் தொடர்ந்து உலா வந்து கொண்டு இருக்கிறது.

அச்சம்

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன்னிகா தேவி காலனி குடியிருப்பு பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் தேயிலை தோட்டத்தை ஒட்டி செல்லும் நடைபாதையில் 2 குட்டிகளை தனது முதுகில் சுமந்தவாறு கரடி ஒன்று சுற்றித்திரிகிறது. இதனால் அங்கு பச்சை தேயிலை பறிக்கும் தொழிலாளர்களும், அப்பகுதி மக்களும் பெரும் அச்சமடைந்து உள்ளனர்.

கூண்டு வைத்து...

இது குறித்து கன்னிகாதேவி காலனி மக்கள் கூறியதாவது:-

குடியிருப்பு பகுதிகள் மற்றும் தேயிலை தோட்டங்களில் குட்டிகளுடன் கரடி ஒன்று தொடர்ந்து உலா வருகிறது. தனது குட்டிகளுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டு விடுமோ? என்கிற அச்சத்தில் தாய்க்கரடி பொதுமக்களை தாக்கும் அபாயம் உள்ளது. எனவே அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படும் முன் கரடிகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்