கோத்தகிரி
கோத்தகிரி அருகே உயிலட்டி, குன்னியட்டி பகுதியில் கடந்த சில மாதங்களாக 3 கரடிகளின் நடமாட்டம் இருந்தது. அங்கு வனத்துறையினர் வைத்த கூண்டில் 2 கரடிகள் சிக்கின. மற்றொரு கரடி தப்பி ஓடியது. மீண்டும் கூண்டு வைக்கப்பட்டாலும், அதில் சிக்காமல் குடியிருப்பு பகுதிகள், சாலைகள் மற்றும் தேயிலை தோட்டங்களில் ஆக்ரோஷத்துடன் உலா வருகிறது. சமீபத்தில் குன்னியட்டி கிராமத்தை சேர்ந்த தொழிலாளியை துரத்தியது.
இந்த நிலையில் நேற்று மாலையில் உயிலட்டி செல்லும் சாலையில் அந்த கரடி உலா வந்தது. இதை கண்ட வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். சிறிது தூரம் சாலையின் நடுவே நடந்து சென்ற கரடி, அதன்பின்னர் அருகில் உள்ள தேயிலை தோட்டத்திற்குள் சென்று மறைந்தது. இரவு, பகல் பாராமல் குடியிருப்பு பகுதிகளில் உலா வருவதால் கிராம மக்கள் மாலை 6 மணிக்கு மேல் வெளியே வராமல் வீட்டிலேயே முடங்கி விடுகின்றனர். மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படும் முன்பு அந்த கரடியின் நடமட்டத்தை கண்காணித்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.