கோவிலுக்குள் புகுந்த கரடியால் பரபரப்பு
எமரால்டு பகுதியில் கோவிலுக்கு கரடி புகுந்து பூஜை பொருட்களை சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மஞ்சூர்
எமரால்டு பகுதியில் கோவிலுக்கு கரடி புகுந்து பூஜை பொருட்களை சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரடி நடமாட்டம்
நீலகிரி மாவட்டம் ஊட்டி, மஞ்சூர் பகுதிகளை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் காட்டெருமை, கரடி, சிறுத்தை, காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. அவை உணவு மற்றும் தண்ணீர் தேடி அவ்வப்போது குடியிருப்புக்குள் புகுந்து வருகின்றன. தற்போது வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் எமரால்டு அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கரடி அதே பகுதியில் உள்ள முனீஸ்வரர் கோவில் வளாகத்திற்குள் புகுந்தது. பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்றது. அங்கு பூஜைக்காக வைக்கப்பட்டு இருந்த எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை கரடி சேதப்படுத்தியது. இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இதனால் பக்தர்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
பிடிக்க வேண்டும்
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு எமரால்டு போலீஸ் நிலைய வளாகத்திற்குள் சிறுத்தை புகுந்தது. இந்த காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலானது. எமரால்டு பகுதியில் கரடி, சிறுத்தை நடமாட்டம் அதிகமாக உள்ளதால், பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது,
கடந்த டிசம்பர் மாதம் முதல் எமரால்டு பகுதியில் கரடி சுற்றித்திரிந்து வருகிறது. அந்த கரடி எமரால்டு போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து மீண்டும் வெளியே வந்தது. தற்போது மீண்டும் பஜார் பகுதியில் சுற்றி திரிகிறது. இதனால் தோட்ட வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் பீதியில் உள்ளனர். எனவே, கரடியை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும். இல்லையென்றால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றனர்.