தேவர்சோலை பஜாருக்குள் கரடி புகுந்தது

தேவர்சோலை பஜாருக்குள் கரடி புகுந்து நடமாடியது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

Update: 2023-09-17 22:30 GMT

கூடலூர்

தேவர்சோலை பஜாருக்குள் கரடி புகுந்து நடமாடியது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

கரடி நடமாட்டம்

கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் காட்டு யானைகள் ஊருக்குள் தினமும் வருகிறது. இதேபோல் சிறுத்தைகளும் இரவில் சில சமயங்களில் ஊருக்குள் வந்து வளர்ப்பு பிராணிகளை பிடித்து செல்கிறது. இதற்கிடையே கடந்த 2 வாரங்களுக்கு முன்பு முதன்முறையாக கூடலூருக்குள் கரடி வந்தது. இதனால் கூடலூரில் அதிகாலை நேரத்தில் மக்கள் தங்களது அன்றாட பணிகளை தொடங்க முடியாமல் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். இந்தநிலையில் கூடலூருக்கு அடுத்தபடியாக தேவர்சோலை பஜாருக்குள் நேற்று முன்தினம் நள்ளிரவு கரடி கூடலூர்-கேரள சாலையில் நடமாடியது. இதை பார்த்த தெரு நாய்கள் கரடியை சுற்றி வளைத்து குரைத்தது. இதனால் சத்தம் கேட்டு பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருந்து வெளியே வந்து பார்த்தனர். அப்போது முக்கிய சாலையில் கரடி நடந்து செல்வதையும், அதை சுற்றி தெரு நாய்கள் குரைத்தவாறு செல்வதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பொதுமக்கள் பீதி

தெரு நாய்கள் சூழ்ந்த போதிலும், கரடி உணவு தேடிய படி சென்றது. சிறிது நேரத்துக்கு பின்னர் வந்த வழியாக கரடி திரும்பி சென்றது. இதை அப்பகுதி மக்கள் தங்களது செல்போன்களில் பதிவு செய்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. தொடர்ந்து முதன் முறையாக தேவர்சோலை பஜாருக்குள் கரடி வந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, இதுவரை இல்லாத வகையில் தேயிலை தோட்டம் வழியாக கரடி பஜாருக்குள் புகுந்து உள்ளது. இதனால் அதிகாலை நேரத்தில் மக்கள் நடமாட முடியாத நிலை உள்ளது.

எனவே, வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி கரடியை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்