பொன்னை ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும்
பொன்னை ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என்று தெங்கால் ஊராட்சி மன்ற தலைவர் பி.இந்திரா பத்மநாபன் கோரிக்கை விடுத்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா ஒன்றியத்தில் தெங்கால் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் 6 வார்டுகள் உள்ளன. ஊராட்சி மன்ற தலைவராக பி.இந்திரா பத்மநாபன் உள்ளார். ஊராட்சியில் நிறைவேற்றப்பட்ட பணிகள் குறித்து அவர் கூறியதாவது:-
முடிக்கப்பட்ட பணிகள்
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் மெயின் ரோடு திரவுபதி அம்மன் கோவில் தெருவில் சிமெண்டு சாலை ரூ.38 லட்சத்திலும், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் களத்துமேடு தெருவில் ரூ.4 லட்சத்து 41 ஆயிரத்தில் சிமெண்டு சாலை, 15-வது மானிய நிதி குழு திட்டத்தில் பஜனை கோவில் தெருவில் கழிவுநீர் கால்வாய் ரூ.2 லட்சத்து 79 ஆயிரத்து 200 மதிப்பிலும், அம்பேத்கர் தெருவில் சிமெண்டு சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் ரூ.2 லட்சத்து 39 ஆயிரத்திலும் அமைக்கப்பட்டுள்ளது.
தெங்கால் - மேல்விஷாரம் ஆற்றுப்பாலம் வரை 40 புதிய மின் கம்பங்கள் நட்டு, அதில் மின்விளக்குகள் ரூ.8 லட்சத்து 50 ஆயிரத்தில் பொருத்தப்பட்டுள்ளது. சீனிவாசன் நகரில் 11 புதிய மின்விளக்குகள் அமைத்தது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
கண்காணிப்பு கேமராக்கள்
பகுதி நேர கிராம நிர்வாக அலுவலர் கட்டிடம் கட்டி திறக்கப்பட்டது. பொன்னை ஆற்றில் மணல் கொள்ளையை தடுக்க, சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவுரையின் பேரில், கிராமம் முழுவதும் முக்கிய சாலை மற்றும் தெருக்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. தி.மு.க. மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர் வினோத் காந்தி தலைமையில், திரவுபதி அம்மன் கோவில் அருகில் 3 ஏக்கர் பரப்பளவில் மா மரக்கன்றுகள் நடப்பட்டது. ஊராட்சி நிர்வாகம், ராணிப்பேட்டை ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து 200 மா மரக்கன்றுகள் நடப்பட்டது.
பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாளையொட்டி அரசின் பசுமை திட்டத்தின் கீழ் ஒரு ஏக்கர் பரப்பளவில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டது. தெங்கால் - மேல்விஷாரம் பகுதியில் பைப்லைன் அமைத்து ஒரு ஏக்கர் பரப்பளவில் 75 தென்னங்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. 2 முறை மருத்துவ முகாம் நடத்தி உள்ளோம். தொகுப்பு வீடு கட்ட 47 பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்று அனுப்பியுள்ளோம்.
மாணவி படிக்க உதவி
இருளர் சமுதாய மக்களுக்கு தீபாவளி, பொங்கல் பண்டிகையின் போது பாய், போர்வை, துணிகள் உள்ளிட்டவைகளை வழங்கினோம். அச்சமுதாய மக்கள் 27 பேருக்கு ஆதார் அட்டை வாங்கி கொடுத்துள்ளோம். புயல் மழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது, இருளர் இன மக்களை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தங்க வைத்து அவர்களுக்கு சமூக ஆர்வலர்கள் சிப்காட் சிவா, ராஜ்குமார் ஆகியோருடன் ஊராட்சி நிர்வாகம் சார்பில் உணவு, துணிகள் வழங்கினோம்.
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நூலகத்தில் புத்தகங்களை அடுக்கி வைக்க அலமாரி, ஆழ்துளை கிணறு, அங்கன்வாடி கட்டிடத்திற்கு குடிநீர் குழாய் அமைத்து கொடுத்தோம். தெங்கால் - மேல்விஷாரம் சாலையோர முட்புதர், ஆக்கிரமிப்புகளை அகற்றினோம். ஒன்றிய கவுன்சிலர் நிதியில் இருந்து ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்தில் பள்ளி கட்டிடம் சீர் செய்யப்பட்டது. அவரக்கரை பகுதியில் வறுமையால் வாடிய மாணவி ஒருவர் நர்சிங் படிக்க விரும்புவதை அறிந்து, அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றோம். அதன் பயனாக அமைச்சர் ஆர்.காந்தி மாணவியின் படிப்பு செலவை ஏற்றுக் கொண்டார்.
தடுப்பணை
புதிய காரியமேடை, நாடக மேடை, சுடுகாடு சீர் செய்தல், பொன்னை ஆற்றில் உள்ள பழமை வாய்ந்த தெங்கால் கசக்கால்வாயில் அமைச்சர் ஆர்.காந்தி உதவியுடன் சிமெண்டு கால்வாய் கட்ட முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. சிவன் கோவிலில் சுற்றுச்சுவர் கட்டும் பணி ஆகியவை நடைபெற உள்ளது.
கல்லூரி மாணவர்கள், நோயாளிகள், ஆன்மிகப் பயணம் மேற்கொள்பவர்கள் பயன்பெறும் வகையில் வாலாஜாவில் இருந்து தெங்கால், மேல்விஷாரம் வழியாக அடுக்கம்பாறை வரை பஸ் இயக்க வேண்டும். நவ்லாக் அரசு பண்ணையில் விவசாய கல்லூரி அமைக்க வேண்டும், பொன்னை ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும், திரவுபதி அம்மன் கோவில் அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு மின்சார இணைப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி மூலமாக அரசின் கவனத்திற்கு எடுத்து சென்றுள்ளோம்.
மக்களின் அடிப்படை பிரச்சினைகளை உடனடியாக தீர்த்து வைக்கிறேன். மேலும் அமைச்சர் ஆர்.காந்தி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, வாலாஜா ஒன்றியக் குழு தலைவர் சேஷா வெங்கட், ஒன்றிய கவுன்சிலர் கோமதி விஜயகுமார் ஆகியோரின் ஒத்துழைப்போடு, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஏ.பெருமாள், வார்டு உறுப்பினர்கள் டி.செந்தாமரை திருகண்டன், பி.சங்கீதாபிரியா பாஸ்கர், எஸ்.அமுலு, என்.முரளிதரன், என்.பழனிச்சாமி ஆகியோருடன் இணைந்து மக்கள் பணியை செவ்வனே செய்து ஊராட்சியை முன்மாதிரி ஊராட்சியாக மாற்ற பாடுபட்டு வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.