செல்லனாற்றில் தடுப்பணை கட்டித்தர வேண்டும்

திருவெண்காடு அருகே நாயக்கர் குப்பம் செல்லனாற்றில் தடுப்பணை கட்டித்தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-12-17 18:45 GMT

திருவெண்காடு:

திருவெண்காடு அருகே நாயக்கர் குப்பம் செல்லனாற்றில் தடுப்பணை கட்டித்தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலில் கலக்கிறது

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு அருகே பெருந்தோட்டம் கிராமத்தில் ஏரி உள்ளது. பெருந்தோட்டம் ஏரி வழியாக நீர் பாசனத்திற்காக பண்டாரவாடை வாய்க்கால், சங்கடி வாய்க்கால் அகரபெருந்தோட்டம் வாய்க்கால், முனீஸ்வரன் வாய்க்கால், சின்னப்பெருந்தோட்டம் வாய்க்கால் வழியாக விவசாய நிலங்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. மழை காலங்களில் உபரி நீர் மேற்கண்ட வாய்க்கால்கள் வழியாக செல்லனாறு ஆற்றை அடைந்து அதன் பின்னர் கடலில் கலக்கிறது. மேலும் சின்ன பெருந்தோட்டம் வாய்க்காலின் 3 கிளை வாய்க்காலும் செல்லனாறு வடிகாலில் வழக்கமாக வந்து கலக்கிறது. இது மட்டுமின்றி தொடர் மழை மற்றும் வெள்ள காலங்களில் பெருந்தோட்டம் ஏரியின் வாய்க்கால் வழியாக வடியும் தண்ணீருடன் சின்ன பெருந்தோட்டம், திருவெண்காடு, கீழசட்டநாதபுரம், நல்லூர், குச்சிபாளையம், அல்லிவிளாகம், கீழநாங்கூர், மேலநாங்கூர் ஆகிய பகுதிகளில் இருந்து வெள்ள நீர் இந்த ஆற்றின் மூலம் கடலில் கலக்கிறது.

தடுப்பணை கட்டித்தர வேண்டும்

விவசாயத்திற்கு ஆதாரமாக, விவசாயத்துக்கு முதுகெலும்பாக விளங்குகின்ற இந்த செல்லனாறு ஆற்றை தூர்வாரி ஆழப்படுத்தவும், கடலோடு கலக்கும் இடத்தில் தடுப்பணை கட்டித்தர வேண்டும் என நீண்ட நாட்களாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனை அடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் பல முறை செல்லனாறு பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்து விட்டு சென்று விடுகின்றனர். ஆனால் இதுவரை எந்தவிதமான திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை.

உவர் தன்மை மாறுவது தடுக்கப்படும்

இதுகுறித்து அந்தபகுதி விவசாயி செந்தில்செல்வன் கூறுகையில், கடந்த 2004-ல் ஏற்பட்ட சுனாமி தாக்குதலில் இந்த ஆற்றின் வழியாக கடல்நீர் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு உட்புகுந்தது. இன்னும் சில மீட்டர்கள் உட்புகுந்து இருந்தால் அல்லிமேடு, அகர பெருந்தோட்டம், மெய்யன்தெரு பெரிய பெருந்தோட்டம் பகுதியில் பலத்த உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும். இதனை அடுத்து தனியார் தொண்டு நிறுவனம் மூலம் இந்த ஆற்றின் கரைகள் அகலப்படுத்தப்பட்டன. ஆனால் போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் தற்போது கரைகள் முற்றிலும் சேதம் அடைந்து காணப்படுகிறது. மேலும் இந்த ஆற்றின் வழியாக செல்லும் பக்கிங்காம் கால்வாயை தூர்வாரி அகலப்படுத்த வேண்டும். செல்லனாறு கடலோடு கலக்கும் இடத்தில் தடுப்பணை கட்டும் திட்டத்தை செயல்படுத்தினால் நாயக்கர் குப்பம், மடத்து குப்பம், சாவடி குப்பம், பெருந்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் நன்னீராக மாறும் நிலை ஏற்படும். இதனால் விவசாய நிலங்கள் உவர் தன்மை மாறுவது தடுக்கப்படும். அதோடு மட்டுமல்லாமல் கடலோர கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நீங்கும். எனவே இந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்