ஆலமரத்தில் தீப்பிடித்தது
பெரியகுளம் அருகே ஆலமரத்தில் தீப்பிடித்து எரிந்தது.
பெரியகுளத்தில் இருந்து சோத்துப்பாறை அணைக்கு செல்லும் சாலையில் நந்தவனம் என்னுமிடம் உள்ளது. இங்கு சுமார் 200 ஆண்டுகள் பழமையான ஆலமரம் ஒன்று உள்ளது. இந்த மரத்தில் ஏராளமான விழுதுகள் உள்ளன.
இந்நிலையில் நேற்று மாலை மரத்தின் அடியில் இருந்த காய்ந்த செடிகள் மற்றும் இலைகளில் யாரோ ஒருவர் தீ வைத்துள்ளார். இந்த தீ மளமளவென வேர் வழியாக பரவி, மரத்தின் மேற்பகுதியில் தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து பெரியகுளம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் முத்துச்செல்வம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.