சிமெண்டு சாலையின் நடுவில் வைக்கப்பட்ட பதாகையால் பரபரப்பு
சிமெண்டு சாலையின் நடுவில் வைக்கப்பட்ட பதாகையால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆலங்குடி:
ஆலங்குடி தாலுகா வெண்ணவால்குடி ஊராட்சிக்குட்பட்டது மயிலாடிக்காடு கிராமம். இந்த கிராமத்தில் 200 மீட்டர் தூரத்திற்கு சிமெண்டு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த சுப்பையா மகன் பாண்டியன் (வயது 36), ராஜாக்கண்ணு (40) ஆகிய இருவரும் தங்களது நிலத்தில் சிமெண்டு சாலை அமைத்திருப்பதாக புதுக்கோட்டை முதன்மை கூடுதல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதுதொடர்பாக நீதிமன்றம் பலமுறை வருவாய்த்துறைக்கு சம்மன் அனுப்பியும் அவர்கள் ஆஜராகாமல் இருந்தனர். இதையடுத்து இடத்தின் உரிமையாளர்கள் சிமெண்டு சாலையின் நடுவில் அறிவிப்பு பதாகையை வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் ஆலங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் விரைந்து வந்து பதாகையை அகற்றினர்.