தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டும்

தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டும்

Update: 2022-09-26 19:53 GMT

மல்லிப்பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோரிக்கை மனு

தமிழக மீனவர் பேரவை மாநில செயலாளர் தாஜூதீன் அரசுக்கு அனுப்பியுள்ள ஒரு கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

சேதுபாவாசத்திரம் அருகில் உள்ள மல்லிப்பட்டிணத்தில் கடந்த 2018-ம் ஆண்டுக்கு முன்பு ரூ.65 கோடி மதிப்பீட்டில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்பட்டது. அப்போது அந்த துறைமுகத்தில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலுக்கு சென்று வந்தன. புதிதாக கட்டப்பட்ட துறைமுகத்தில் படகுகளை பாதுகாக்கும் வண்ணம் தூண்டில் வளைவு அமைக்க திட்ட மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என மீனவர்கள் சார்பில் பலமுறை தெரிவித்தும் இதுவரை தூண்டில் வளைவு அமைக்கப்படவில்லை.

தூண்டில் வளைவு

அதே சமயம் தூண்டில் வளைவு இல்லாததால் 2018-ஆண்டு வீசிய கஜா புயலில் சுமார் 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் சேதமடைந்துள்ளது. தற்போது அந்த துறைமுகத்தில் சுமார் 100-க்கும் குறைவான படகுகள் மட்டுமே மீன்பிடி தொழில் செய்துவருகிறது. இந்த ஆண்டு பருவமழையின் தாக்கம் அதிகம் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் புயல் உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகளால் படகுகளுக்கு மீண்டும் சேதம் ஏற்பட்டுவிடுமோ? என்ற அச்சம் மீனவர்கள் மத்தியில் நிலவுகிறது. மீனவர்களின் நலன்கருதி படகுகளை பாதுகாக்கும் வண்ணம் மல்லிப்பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் தூண்டில் வளைவு அமைத்து தர அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்