கண்டாச்சிபுரம் அருகே விவசாயி வீட்டு திண்ணையில் கிடந்த பச்சிளம் ஆண் குழந்தை போட்டுச்சென்றவர் யார்? போலீஸ் விசாரணை

கண்டாச்சிபுரம் அருகே விவசாயி வீட்டு திண்ணையில் பச்சிளம் ஆண் குழந்தை கிடந்தது. குழந்தையை போட்டுச்சென்றவர் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-07-01 17:17 GMT

திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் அடுத்த கண்டாச்சிபுரம் அருகே உள்ள பீமாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஏகாம்பரம், விவசாயி. இவருடைய வீட்டின் திண்ணையில் நேற்று காலை சுமார் பிறந்து 15 நாட்களே ஆன பச்சிளம் ஆண்குழந்தை கேட்பாரற்று கிடந்தது. அந்த குழந்தையை யாா் திண்ணையில் படுக்க வைத்துச் சென்றார்கள் என தெரியவில்லை. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த ஏகாம்பரம் குடும்பத்தினர் இதுபற்றி கண்டாச்சிபுரம் போலீசாருக்கும், சமூக நலத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குழந்தையை கைப்பற்றி, சமூக நல அலுவலர் கனிமொழியிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து கனிமொழி கூறுகையில், மீட்கப்பட்ட ஆண் குழந்தையை மாவட்ட சமூக நலத்துறையிடம் ஒப்படைத்து தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கப்படும். மேலும் இந்த குழந்தைக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு பராமரிக்கப்படும். குழந்தைக்கு யாராவது சொந்தம் கொண்டாடி வந்தால் உரிய விசாரணை மற்றும் சோதனை செய்யப்பட்டு குழந்தை ஒப்படைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார். மேலும் குழந்தையை போட்டுச் சென்றவர் யார்? என கண்டாச்சிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விவசாயி வீட்டு திண்ணையில் பச்சிளம் குழந்தையை மர்மநபர் வீசிச் சென்ற சம்பவம் கண்டாச்சிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்