தூத்துக்குடியில் மொபட்டில் சென்ற பெண்ணிடம் 9 பவுன் சங்கிலி பறித்த வாலிபர் சிக்கினார்

தூத்துக்குடியில் மொபட்டில் சென்ற பெண்ணிடம் 9 பவுன் சங்கிலி பறித்த வாலிபர் சிக்கினார். ஏழு மணி நேரத்தில் நடவடிக்கை எடுத்த போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜிசரவணன் தெரிவித்தார்.

Update: 2022-10-21 18:45 GMT

தூத்துக்குடியில் மொபட்டில் சென்ற பெண்ணிடம் 9 பவுன் தங்கசங்கிலியை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிய வாலிபரை 7 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.

நகைபறிப்பு

தூத்துக்குடி மகிழ்ச்சிபுரத்தை சேர்ந்தவர் காமராஜ். இவருடைய மனைவி கவிதா (வயது 42). இவர் நேற்று முன்தினம் இரவு டூவிபுரம் பகுதியில் மொபட்டில் சென்று கொண்டு இருந்தாராம். அப்போது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர், கவிதா கழுத்தில் கிடந்த 9 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த கவிதா தூத்துக்குடி மத்தியபாகம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தொடர்ந்து மத்தியபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

கைது

அப்போது, தூத்துக்குடி ராஜகோபால் நகரை சேர்ந்த சங்கரலிங்கம் மகன் கண்ணன் (23) என்பவர், கவிதாவின் கழுத்தில் இருந்து தங்கசங்கிலியை பறித்து சென்று இருப்பது தெரியவந்தது. உடனடியாக தனிப்படை போலீசார் கண்ணனை கைது செய்தனர். அவரிடம் இருந்து, 9 பவுன் சங்கிலியையும் போலீசார் மீட்டனர். மேலும் நகை பறிப்புக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மத்தியபாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வழிப்பறி நடந்த 7 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்