கல்குவாரி குட்டையில் மூழ்கி4 மாத குழந்தை, சிறுமி பலி

புதுக்கோட்டை அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி 4 மாத குழந்தை, சிறுமி பலியாகினர். தாய், மற்றொரு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2023-07-02 18:01 GMT

விவசாயி

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே கூத்தினிப்பட்டியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 40). விவசாயி. இவரது மனைவி சிவரஞ்சனி (28). இவர்களுக்கு நிவேதா (7), தஷிகா (5) மற்றும் ஹரிணி என்ற 4 மாத குழந்தை ஆகிய 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

சிவரஞ்சனி சற்று மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. நிவேதா அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார்.

சிறுமி பலி

இந்த நிலையில் இன்று காலை சிவரஞ்சனி தனது 3 மகள்களுடன் கூத்தினிப்பட்டி அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான பயன்பாடில்லாத கல்குவாரி குட்டைக்கு குளிக்க சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது அவர்கள்4 பேரும், தண்ணீரில் மூழ்கி உள்ளனர். இதையடுத்து அவர்கள் சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து சிவரஞ்சனி மற்றும் அவரது மகள்கள் தஷிகா, நிவேதா ஆகிய 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நிவேதா பரிதாபமாக உயிரிழந்தார். சிவரஞ்சனி, தஷிகா ஆகிய 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

4 மாத குழந்தை பிணமாக மீட்பு

இதுகுறித்து இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், தீயணைப்பு அலுவலர் மகேந்்திரன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் கல்குவாரி குட்டையில் இறங்கி 4 மாத குழந்தை ஹரிணியின் உடலை மீட்டு வெளிேய கொண்டு வந்தனர். இதையடுத்து அங்கு வந்த அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் 4 மாத குழந்தை ஹரிணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 மாத குழந்தை உள்ளிட்ட 2 பேர் கல்குவாரி குட்டையில் மூழ்கி இறந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த சிறுமிகளின் வீட்டில் குவிந்த உறவினர்கள் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி அழுத சம்பவம் அங்கிருந்தவர்களையும் கண் கலங்க செய்தது.

Tags:    

மேலும் செய்திகள்