திருமங்கலம் அருகே 300 ஆண்டுகள் பழமையான நாயக்கர் கால நடுகல் கண்டெடுப்பு

திருமங்கலம் அருகே 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த நாயக்கர் கால நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Update: 2023-06-14 21:29 GMT

திருமங்கலம்,

திருமங்கலம் அருகே 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த நாயக்கர் கால நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நடுகல்

திருமங்கலம் வட்டம் மொச்சிகுளத்தில் பழமையான சிலை இருப்பதாக அப்பகுதியை சேர்ந்த வரலாற்று துறை மாணவர்கள், வரலாற்று துறை உதவி பேராசிரியர்களான தாமரைக்கண்ணன், நடராஜன் மற்றும் பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளர் ஸ்ரீதர் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் அங்கு சென்று ஆய்வு செய்ததில், அந்த சிலை, 300 ஆண்டுகள் பழமையான நாயக்கர் காலத்தைச் சேர்ந்த நடுகல் என்று தெரியவந்தது.

இதுகுறித்து மேலும் அவர்கள், இந்த நடுகல் சிற்பமானது 3 அடி உயரம் 2 அடி அகலம் கொண்ட பலகைக்கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இதில் வீரன் ஒருவன் தனது வலது கையில் வாளை உயர்த்தி பிடித்தும் மற்றொரு கையினை தொடையில் வைத்தபடியும் இடது தோள்புஜத்தில் கேடயமும் இடம்பெறுமாறு நேர்த்தியாக வடிக்கப்பட்டுள்ளது.

மனைவியின் உருவம்

தலைப்பகுதி இடப்பக்கம் சரிந்த கொண்டையும், நீண்ட காதுகளையும், மார்பில் ஆபரணங்களும், வீரச் சங்கிலியும் அணிந்தபடி இடையில் இடைக்கச்சை அணிந்தபடி சிற்பம் கம்பீரமாக வடிக்கப்பட்டுள்ளது. இவ்வீரனுக்கு இடப்பக்கம் இவரின் மனைவியின் உருவமும் செதுக்கப்பட்டுள்ளது. மேலும் போரில் ஈடுபட்டு வீரமரணம் அல்லது வீரதீர செயல்களில் ஈடுபட்ட வீரர்களுக்கு நடுகல் எடுப்பது மரபு. அந்த வகையில் நாயக்கர் காலத்தில் ஒரு வீரனுக்கு எடுக்கப்பட்ட நடுகல் ஆகும். தன் கணவர் இறந்த துக்கம் தாளாமல் மனைவியும் கணவன் எரியும் தீயில் தன் உயிரை மாய்த்துக் கொண்டதால் இவர்களுக்கு நடுகல் எடுத்துள்ளனர் என்றும், பொதுமக்கள் இதனை காளி கோவில் என்று கூறி வழிபட்டு வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்