மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்த 3 வயது குழந்தை பலி
ஆரணி அருகே மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்த 3 வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.
ஆரணி
ஆரணியை அடுத்த வடக்குமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 32).
பழைய இரும்பு கடையில் கூலி வேலை செய்யும் இவர் ராட்டினமங்கலம் இ.பி. நகர் பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு 3 வயதில் சர்வந்த், சர்வேஸ் என்ற இரட்டை குழந்தைகள் உள்ளன.
இந்த நிலையில் நேற்று இரவு 2 குழந்தைகளையும் மோட்டார் சைக்கிளில் அமர வைத்து கொண்டு வி.ஏ.கே. நகர் வழியாக ராட்டினமங்கலம் செல்வதற்கு பைபாஸ் சாலையில் சக்திவேல் சென்றார்.
அப்போது கீழே கிடந்த கல் மீது மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கியபோது நிலை தடுமாறியதில் கீழே விழுந்த சர்வந்த்துக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு,
பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சர்வந்த் பரிதாபமாக இறந்தான்.
இது குறித்து ஆரணி தாலுகா போலீசில் சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.