சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் 23 ஆண்டுகளான புங்கை மரம் வெட்டப்பட்டது. அந்த இடத்தில் உருக்கமான வாசகங்களுடன் வைக்கப்பட்ட பேனரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புங்கை மரம்
சேலம் புதிய பஸ் நிலையம் அருகே சின்னேரி வயக்காடு செல்லும் பகுதியில் கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு நடப்பட்ட புங்கை மரம் பராமரிக்கப்பட்டு வந்தது. அதனை சமூக ஆர்வலர்கள் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தண்ணீர் ஊற்றி வளர்த்து வந்தனர்.
அந்த மரம் திடீரென வெட்டப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மரம் வெட்டப்பட்டது தொடர்பாக பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
உருக்கமான வாசகங்கள்
இதற்கிடையில் மரத்தை வெட்டியதை கண்டித்து அந்த இடத்தில் பேனர் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அந்த பேனரில், வெட்டப்பட்ட மரத்தின் பாகங்கள் கிடந்த புகைப்படங்கள் அச்சிடப்பட்டுள்ளன. மேலும் மரமே தன்னுடைய நிலை குறித்து உருக்கமாக கூறுவது போன்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
அதாவது, நீர் தந்தேன், நிழல் தந்தேன், மகிழ்வித்தேன், சுகம் தந்தேன், காற்று தந்தேன், அனைத்து உயிருக்கும் நன்மை மட்டுமே செய்தேன்...! மனிதர்களே...! என்ன தவறு செய்தேன...?் என்னை ஏன் வெட்டினார்கள்...? ஏன் நீங்க தடுக்கவில்லை...? என்னை வளர்த்த தோழர்களே சோர்ந்து விடாதீர்கள்! வெட்ட வெட்ட துளிர்கின்ற விருட்சங்களாய் இருப்போம். நாளை வீதியெங்கும் கிளை பரப்பி விண்வெளிக்கும் வியாபிப்போம். இப்படிக்கு தலையில்லா முண்டமாய் இருக்கும் புங்கை மரம் என்று உருக்கமாக எழுதப்பட்டிருந்தது. இந்த பேனரால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.