ஏற்காடு மலைக்கிராமத்தில் தந்தையின் கையில் இருந்து 2 மாத குழந்தை கீழே விழுந்து பலி மளிகை பொருட்களை பறித்து சென்ற குரங்கை துரத்தியபோது சோகம்

ஏற்காடு மலைக்கிராமத்தில் தந்தையின் கையில் இருந்து 2 மாத ஆண் குழந்தை கீழே விழுந்து பலியானது. தந்தை வைத்திருந்த மளிகை பொருட்களை பறித்து சென்ற குரங்கை துரத்தியபோது இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

Update: 2022-12-17 20:00 GMT

ஏற்காடு, 

தனியார் எஸ்டேட் கண்காணிப்பாளர்

சேலம் மாவட்டம், ஏற்காடு நாகலூர் மலைக்கிராமத்தை சேர்ந்தவர் நிஷாந்த் (வயது 29). இவர் இந்த பகுதியில் உள்ள தனியார் எஸ்டேட் ஒன்றில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி மாலதி (24). இவர்களுக்கு பிறந்து 2 மாதமே ஆன ஆண் குழந்தை இருந்தது.

கடந்த 15-ந் தேதி மதியம் நிஷாந்த் தனது மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் அருகில் உள்ள கடைக்கு மளிகை பொருட்கள் வாங்க சென்றார். பின்னர் அங்கிருந்து அவர்கள் பொருட்களை வாங்கி கொண்டு வீட்டுக்கு திரும்ப வந்தனர். குழந்தையை மாலதியும், மளிகை பொருட்களை நிஷாந்த்தும் வைத்திருந்தனர்.

குரங்கை துரத்திய போது..

இந்தநிலையில் வீட்டை திறப்பதற்காக மாலதி கைக்குழந்தையை தனது கணவரிடம் கொடுத்தார். குழந்தையை கையில் வைத்துக்கொண்டு, மளிகை பொருட்களுடன் நிஷாந்த் நின்று கொண்டிருந்தார். மாலதி கதவு பூட்டை திறக்க முயன்று கொண்டிருந்தார்.

அப்போது அவர்களின் வீட்டு பக்கமாக வந்த குரங்கு ஒன்று, நிஷாந்தின் அருகில் வந்தது. அவர் கையில் வைத்திருந்த பையில் இருந்த மளிகை பொருட்களை திடீரென பறித்து கொண்டு அங்கிருந்து ஓடியது. இதை சற்றும் எதிர்பாராத நிஷாந்த் குழந்தையை கையில் வைத்தபடி குரங்கை துரத்தி பிடிக்க முயன்றார்.

பலி

அப்போது எதிர்பாராதவிதமாக அவரின் கையில் இருந்து நழுவி கைக்குழந்தை திடீரென கீழே தவறி விழுந்தது. இதில் குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு வீக்கம் உருவானது. உடனே நாகலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு குழந்தையை பெற்றோர் தூக்கிச்சென்றனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கைக்குழந்தை நேற்று முன்தினம் பகலில் பரிதாபமாக இறந்தது.

இந்த சம்பவம் குறித்து ஏற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குரங்கை விரட்டிய போது, கையில் இருந்த கைக்குழந்தை தவறி விழுந்து பலியான சம்பவம் ஏற்காடு நாகலூர் மலைக்கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்