சேலம் ஜாரிகொண்டலாம்பட்டியில் 14 மாத பெண் குழந்தை திடீர் சாவு
சேலம் ஜாரிகொண்டலாம்பட்டியில் 14 மாத பெண் குழந்தை திடீரென இறந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொண்டலாம்பட்டி:
பெண் குழந்தை
சேலம் ஜாரிகொண்டலாம்பட்டி ராஜா வீதியை சேர்ந்தவர் கோபி (வயது 30). இவரது மனைவி பிரியதர்ஷினி (25). இந்த தம்பதிக்கு 6 வயதில் தக்சதா (6) என்ற மகளும், மேகவர்த்தினி என்ற 14 மாத பெண் குழந்தையும் இருந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் பிரியதர்ஷினி, குழந்தை மேகவர்த்தினிக்கு பால் புகட்டியுள்ளார்.
பின்னர் குழந்தையை கட்டிலில் படுக்க வைத்ததாக கூறப்படுகிறது. அப்போது வலிப்பு ஏற்பட்டு குழந்தை இறந்ததாக தெரிகிறது. இதுகுறித்து பிரியதர்ஷினி கொண்டலாம்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் குழந்தை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணை
மேலும் குழந்தை திடீரென இறந்தது குறித்து வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து குழந்தை வலிப்பு நோய் வந்து இறந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
14 மாத பெண் குழந்தை திடீரென இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.