பூந்தமல்லி அருகே சரக்கு வேன்கள் மோதிய விபத்தில் 10-ம் வகுப்பு மாணவன் சாவு

பூந்தமல்லி அருகே சரக்கு வேன்கள் மோதிய விபத்தில் 10-ம் வகுப்பு மாணவன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

Update: 2023-03-31 11:44 GMT

10-ம் வகுப்பு மாணவன்

பூந்தமல்லியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 30), சரக்கு வேனில் ஐஸ் கட்டிகளை கொண்டு சென்று கடைகளுக்கு சப்ளை செய்யும் தொழில் செய்து வருகிறார். நேற்று காலை வழக்கம் போல பூந்தமல்லி அடுத்த பழஞ்சூரில் சாலையோரம் வேனை நிறுத்திவிட்டு ஐஸ் கட்டிகளை சப்ளை செய்து கொண்டிருந்தார்.

அப்போது பழஞ்சூர், எம்.ஜி.ஆர் தெருவை சேர்ந்த ரகு என்பவர் தனது கரும்பு ஜூஸ் கடைக்கு ஐஸ் கட்டிகளை வாங்க மகன் அஜய்குமாரை (15), மோட்டார் சைக்கிளில் அனுப்பினார். இவர் தன்டலத்தில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். ஐஸ் கட்டிகளை வாங்க அஜய்குமார் வேனின் அருகே நின்று கொண்டிருந்தார். அந்த நேரத்தில் மதுரவாயலில் இருந்து காஞ்சீபுரம் நோக்கி மீன் ஏற்றி கொண்டு சரக்கு வேன் ஒன்று வந்தது. அந்த வேனை சத்யா என்பவர் ஓட்டி வந்தார்.

பலி

அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் நின்று கொண்டிருந்த ஐஸ் கட்டி இருந்த வேனின் பின் பகுதியில் மோதியது. இந்த விபத்தில் ஐஸ் வாங்க நின்று கொண்டிருந்த அஜய்குமார் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் அருகே நின்று கொண்டிருந்த ஐஸ் கட்டி ஏற்றி வந்த வேனின் டிரைவர் சுரேஷ் மற்றும் மீன் வேன் டிரைவர் சத்யா ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர்.

அங்கிருந்த பொதுமக்கள் இருவரையும் மீட்டு தண்டலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். தகவல் அறிந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் சுபாசினி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்துபோன அஜய்குமார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். பின்னர் போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தயாராகி வந்த மாணவன் அஜய்குமார் ஐஸ் கட்டி வாங்க வந்தபோது இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்