நிலவில் இருந்து பார்த்தால் 'தமிழ்' என்ற வார்த்தை தெரியும்படி 100 ஏக்கர் பரப்பளவில் மாதிரி காடு

நிலவில் இருந்து பார்த்தால் ‘தமிழ்’ என்ற வார்த்தை தெரியும் வகையில் தமிழகத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் மாதிரி காடு உருவாக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.

Update: 2023-04-13 23:55 GMT

சென்னை,

தமிழக சட்டசபையில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை மீது எம்.எல்.ஏ.க்கள் நேற்று விவாதித்தனர். அவர்களுக்கு பதிலளித்து அந்தத் துறையின் அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது:-

காலநிலை மாற்ற இயக்கத்தை முதல்-அமைச்சர் கடந்த டிசம்பரில் சென்னையில் தொடங்கி வைத்தார். அந்த திட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவின்படி, காலநிலை மாற்ற திறன் கிராமங்களை உருவாக்க வேண்டும். அதன்படி, தமிழகத்தில் முக்கிய சுற்றுலாத்தலங்களான 11 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் நாகை மாவட்டம் கோடியக்கரை, திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தென்காசி மாவட்டம் குற்றாலம், கடலூர் மாவட்டம் பிச்சாவரம், ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், சேலம் மாவட்டம் ஏற்காடு, நீலகிரி மாவட்டம் ஊட்டி, தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல், திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஆகிய இடங்கள் தேர்வாகியுள்ளன.

அங்கு பிளாஸ்டிக்கை பயன்படுத்தக் கூடாது. அங்குள்ள அரசு நிறுவனம் உள்பட எந்தவொரு நிறுவனமும் சூரிய மின்சாரத்தைத்தான் பயன்படுத்த வேண்டும். அங்கு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது.

மரம் நடும் பணி

தமிழகத்தின் மொத்த பரப்பளவான 1.30 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவில் தற்போது 31 ஆயிரம் சதுர கி.மீ. வனத்துறை பரப்பளவாக உள்ளது. பசுமை தமிழகம் திட்டத்தின்படி வனத்துறை பரப்பளவை 33 சதவீதமாக உயர்த்த வேண்டுமானால் அது 42 ஆயிரத்து 919 சதுர கி.மீ.ராக இருக்க வேண்டும். இந்த இலக்கை எட்டுவதற்கு 13 ஆயிரத்து 500 சதுர கி.மீ. அளவுக்கு மரங்களை நட்டாக வேண்டும்.

அந்த வகையில், பசுமை தமிழகம் திட்டத்தின் மூலம் வனப்பரப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஒரு ஆண்டில் 2 கோடியே 82 லட்சம் மரங்கள் நடப்பட்டுள்ளன. பசுமை சைதை திட்டத்தின் மூலம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அப்பகுதியை பசுமையாக மாற்றியுள்ளார். பள்ளி கல்வித்துறை அமைச்சர், பசுமை பள்ளிகளை உருவாக்கி தந்து இருக்கிறார்.

உள்ளாட்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி 70 லட்சம் மரங்களுக்கு ரூ.275 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். பொதுப்பணித் துறை அமைச்சர் நெடுஞ்சாலைகளில் ஆந்திராவில் இருந்து வரவழைக்கப்பட்ட 4 லட்சம் மரங்களை நடவு செய்ததோடு, இந்த ஆண்டு 5 லட்சம் மரங்கள் நடவு செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். அமைச்சர் தா.மோ.அன்பரசன் செங்கல்பட்டு பகுதியில் 50 ஏக்கர் பரப்பில் 7,500 மரங்களை ஒரே நாளில் நடவு செய்தார்.

உணவுத் துறை அமைச்சர் இதுவரை 15 லட்சம் மரங்களை நட்டுள்ளார். இன்னும் 35 லட்சம் மரங்களை நட ஏற்பாடு செய்துள்ளார். சபாநாயகர் 2 ஆண்டுகளாக 2 லட்சம் பனை விதைகளை வழங்கியுள்ளார். மரம் வளர்ப்பதில் முன்னோடியாக இருக்கிறார்கள்.

மாதிரி காடு

நாமெக்கெல்லாம் மூத்த மொழியான தமிழ் மொழியை சிறப்பிக்கும் வகையில் முத்தாய்ப்பாக, நிலவில் இருந்து அல்லது செயற்கைக்கோள் மூலம் தமிழ்நாட்டை பார்க்கும்போது, 'தமிழ்' என்ற வார்த்தை தெரியும் வண்ணம் 100 ஏக்கர் பரப்பளவில் மாதிரி காடு உருவாக்கப்படும். அதற்கான திட்டம் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்