மர்ம நோயால் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுவன்
செம்பட்டி அருகே மர்ம நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என்று அவனது பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
5-ம் வகுப்பு மாணவன்
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எஸ்.பாறைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி கஸ்தூரி. இந்த தம்பதியின் மகன் முகேஷ் (வயது 10). இவன், அதேபகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறான்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு முகேஷ் உடல்நிலை பாதிக்கப்பட்டு திடீரென்று மயங்கி விழுந்தான். குறிப்பாக கடுமையான வயிற்று வலியால் துடித்தான். இதையடுத்து பழனி, திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
மர்மநோய்
இதற்கிடையே சிறுவனை பரிசோதனை செய்ததில் அவனுக்கு வில்சன் காப்பர் என்னும் மர்ம நோய் தாக்கி இருப்பது தெரியவந்தது. கல்லீரல் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ரத்த சுத்திகரிப்பு செய்தால் சரியாகிவிடும் என்று கருதி டாக்டர்கள் சிகிச்சை அளித்ததாக தெரிகிறது.
தொடர் சிகிச்சையின்போதே மாணவனின் உடல்நிலை தொடர்ந்து மோசம் அடைந்தது. இந்தநிலையில் மேல்சிகிச்சைக்காக, புதுச்சேரி ஜிப்மர் அரசு மருத்துவமனைக்கு சிறுவன் கொண்டு செல்லப்பட்டான்.
பின்னர் அங்கிருந்து சென்னையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற அந்த ஏழை தம்பதி, சிகிச்சைக்கு வசதி இன்றி தங்களது கிராமத்துக்கே சிறுவனை கொண்டு வந்து விட்டனர்.
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தால் சிறுவனை காப்பாற்றி விடலாம் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இதற்கு வழியின்றி விழி பிதுங்கி நிற்கின்றனர் அந்த தம்பதி.
தமிழக அரசுக்கு கோரிக்கை
இதுகுறித்து மாணவனின் பெற்றோர் கூறுகையில், திண்டுக்கல், பழனி, மதுரை, புதுச்சேரி என பல்வேறு ஆஸ்பத்திரிகளுக்கு அலைந்து திரிந்தும் நோய் குணமாகவில்லை. இதுவரை ரூ.7 லட்சம் வரை செலவு செய்து விட்டோம். நாளுக்கு நாள் நோயின் தாக்கம் அதிகரித்து வருவதால், குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற நிலையில் வீட்டுக்கு வந்து விட்டோம். எனவே, எங்கள் மகனுக்கு சிகிச்சை அளித்து அவன் உயிர் பிழைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க தெரிவித்தனர்.