வீட்டு சுற்றுச்சுவர் இடிந்து 1½ வயது பெண் குழந்தை பலி

ஆழ்வார்குறிச்சி அருகே, தாத்தாவுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது வீட்டு சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து ஒன்றரை வயது பெண் குழந்தை பலியானது. தாத்தா பலத்த காயம் அடைந்தார்.

Update: 2023-04-25 17:08 GMT

கடையம்:

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகேயுள்ள பொட்டல்புதூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி, கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பிரேமா. இந்த தம்பதிக்கு திருமணமாகி 2½ ஆண்டு ஆகிறது. இவர்களுக்கு ஆதிரா என்ற ஒன்றரை வயது பெண் குழந்தை இருந்தது. நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் குழந்தை ஆதிரா, தனது தாத்தா மகேந்திரனுடன் (வயது 50) வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தாள்.

அப்போது வீட்டின் முன்பக்க சுற்றுச்சுவர் இடிந்து குழந்தை ஆதிரா, மகேந்திரன் ஆகியோர் மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த ஆதிராவை அம்பை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவளை பரிசோதித்த டாக்டர், குழந்தை ஆதிரா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மகேந்திரன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்துஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில், கடையம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மழை பெய்தது. இந்த மழையால் சுவர் நனைந்து இருந்தது. மறுநாளான நேற்று முன்தினம் அந்த சுவர் இடிந்து விழுந்ததில் குழந்தை பலியானது தெரியவந்தது. வீட்டு சுற்றுச் சுவர் இடிந்து குழந்தை பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்