983 பேருக்கு ரூ.4 கோடியே 18 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
திருவாரூரில் நடந்த சுதந்திர தின விழாவில் 983 பேருக்கு ரூ.4 கோடியே 18 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்.
திருவாரூரில் நடந்த சுதந்திர தின விழாவில் 983 பேருக்கு ரூ.4 கோடியே 18 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்.
சுதந்திர தின விழா
திருவாரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் சுதந்திர தின விழா நேற்று நடந்தது. விழாவிற்கு கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் அவர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
இதனை தொடர்ந்து உலக சமாதானத்தை குறிக்கும் வகையில் வெண் புறாக்களை பறக்க விட்டார். சிறப்பாக பணி புரிந்தமைக்காக போலீஸ்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, செய்தி மக்கள் தொடர்புத்துறை உள்ளிட்ட அனைத்துதுறைகளை சேர்ந்த 81 அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
983 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
இதையடுத்து அனைத்து துறைகளின் மூலம் 983 பேருக்கு ரூ.4 கோடியே 18 லட்சத்து 88 ஆயிரத்து 383 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். விழாவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், திட்ட இயக்குனர் தெய்வநாயகி, சுகாதாரத்துறை இணை இயக்குனர் செல்வகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) புண்ணியகோட்டி, உதவி கலெக்டர்கள் சங்கீதா, கீர்த்தனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.