சிறப்பு பஸ்கள் மூலம் ரூ.98 லட்சம் கூடுதல் வருமானம்
பொங்கல் பண்டிகையையொட்டி இயக்கப்பட்ட சிறப்பு பஸ்கள் மூலம் ரூ.98 லட்சம் கூடுதல் வருமானம் கிடைத்துள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி இயக்கப்பட்ட சிறப்பு பஸ்கள் மூலம் ரூ.98 லட்சம் கூடுதல் வருமானம் கிடைத்துள்ளது.
சிறப்பு பஸ்கள்
பொங்கல் பண்டிகை கடந்த 15-ந் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி வெளியூரில் தங்கியிருப்பவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்றனர். அவர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி வேலூர் மண்டல அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சென்னை, பூந்தமல்லி, ஓசூர், தர்மபுரி, திருச்சி, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு 12-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை 205 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ஏராளமான பொதுமக்கள் இதனை பயன்படுத்தினர். இதுதவிர காணும் பொங்கலை முன்னிட்டும் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபுரம், அமிர்தி உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.
ரூ.98 லட்சம் கூடுதல் வருமானம்
இந்த சிறப்பு பஸ்கள் மூலம் வேலூர் மண்டல போக்குவரத்து கழகத்துக்கு ரூ.98 லட்சம் கூடுதல் வருமானம் கிடைத்துள்ளது.இதுகுறித்து போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறியதாவது:-
பொங்கல் பண்டிகையையொட்டி வேலூர் மண்டலத்தில் இருந்து பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. பொங்கல் பண்டிகைக்கு முன்னரும், பின்னரும் என 7 நாட்கள் இந்த பஸ்கள் இயக்கப்பட்டது. வழக்கத்தை விட ஏராளமான பொதுமக்கள் இதனை பயன்படுத்தினர். சாதாரணமாக ஒரு நாளைக்கு ரூ.75 லட்சம் வரை வருமானம் கிடைக்கும். ஆனால் இந்த நாட்களில் சிறப்பு பஸ்கள் மூலம் ஒரு நாளைக்கு சுமார் ரூ.13 லட்சம் வரை கூடுதலாக வருமானம் கிடைத்தது. அதன்படி 7 நாட்களிலும் ரூ.98 லட்சம் வரை போக்குவரத்து கழகத்துக்கு வருமானம் கிடைத்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.