30 மாதத்தில் 960 வீடுகள் கட்டி முடிக்கப்படும்
சிங்காநல்லூரில் வீட்டு வசதி வாரியம் சார்பில் 30 மாதத்தில் 960 வீடுகள் கட்டி முடிக்கப்படும் என்று அமைச்சர் முத்துசாமி கூறினார்.
கோவை
சிங்காநல்லூரில் வீட்டு வசதி வாரியம் சார்பில் 30 மாதத்தில் 960 வீடுகள் கட்டி முடிக்கப்படும் என்று அமைச்சர் முத்துசாமி கூறினார்.
வணிக வளாக கட்டிடம்
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் கோவை சிங்காநல்லூரில் 960 வீடுகள் கட்டும் பணியை அமைச்சர் முத்துசாமி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர், சவுரிபாளையம் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு, கணபதி வருவாய் பிரிவு அடுக்குமாடி வணிக வளாக கட்டுமானப்பணி களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
சவுரிபாளையம் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு 36 சென்ட் நிலத்தில் 5 தளங்களுடன் 27,527 சதுர அடியில் கட்டப்பட்டு உள்ளது. வணிக வளாக கட்டிடம் வாடகைக்கு தயார் நிலையில் உள்ளது. வீடுகளுக்கு வாடகை நிர்ணயம் செய்யப்பட்டு விரைவில் வாடகைக்கு விடப்பட உள்ளது.
30 மாதத்தில் முடிக்கப்படும்
கணபதி பகுதி -1-ல் 60 உயர் வருவாய் பிரிவு அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் கணபதி பகுதி -2-ல் 56 வருவாய் பிரிவு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. இதில் ரூ.55 லட்சம் முதல் ரூ.72 லட்சம் வரையிலான வீடுகள் உள்ளன.
சிங்காநல்லூரில் 960 வீடுகள் கட்டும் பணி 30 மாதத்தில் முடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இது போல் சென்னை உள்பட 12 இடங்களில் வீடுகள் கட்ட பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை வந்துள்ளது. மோசமாக உள்ள கட்டிடங்கள் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.
விற்பனை ஆகாத வீடுகள்
எத்தனை கட்டிடங்கள் கட்டினாலும் அவை தரமானதாக கட்டப்படுகிறதா? என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுள்ளார். தமிழகம் முழுவதும் 3 ஆயிரம் வீடுகள் விற்பனை ஆகாமல் இருந்தன. பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு ஆயிரம் வீடுகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.