சொட்டுநீர் பாசன திட்டத்திற்கு ரூ.960 கோடி நிதி - தமிழக அரசு உத்தரவு

சொட்டுநீர் பாசன திட்டத்திற்கு ரூ.960 கோடி நிதி வழங்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-12-01 23:36 GMT

கோப்புப்படம்

சென்னை,

தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை செயலாளர் சி.சமயமூர்த்தி வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்த ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட்டில், தொகுப்பு அணுகுமுறையில் நுண்ணீர்ப்பாசன முறையை மேம்படுத்த சிறப்புத் திட்டம் அறிவிக்கப்படுகிறது. தமிழகத்தில் தொகுப்பு அணுகுமுறையில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும், மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியம் வழங்கி, சொட்டுநீர்ப் பாசனம் அமைத்து, சாகுபடி பரப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

2022-23-ம் ஆண்டில் 2.50 லட்சம் ஏக்கர் பரப்பில் ரூ.960 கோடி செலவில், மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதியில் இருந்து இந்தத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் அறிவித்தார்.

இதுகுறித்து அரசுக்கு தோட்டகலை மேம்பாட்டு முகமையின் மேலாண்மை இயக்குநர் கடிதம் எழுதியுள்ளார். அதில், ஒரு துளி நீரில் அதிக பயிரீடு என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ரூ.960 கோடிக்கான நிதி இலக்குக்கு, மாநில அளவிலான அனுமதிக் குழு ஒப்புதல் அளித்துள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும், அதில் மத்திய அரசின் பங்களிப்பான ரூ.319 கோடியில் ரூ.79.75 கோடியை முதல் தவணையாக மத்திய அரசு அளித்துள்ளது. எனவே திட்டத்தை அமல்படுத்துவதற்காக மாநில அரசு ரூ.261 கோடியை அனுமதித்து உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.

அவரது கோரிக்கையை அரசு பரிசீலித்து, ரூ.960 கோடிக்கான நிர்வாக அனுமதியை வழங்குவதோடு, ரூ.261 கோடிக்கான நிதி ஒப்பளிப்பு உத்தரவை பிறப்பிக்கிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்