93 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை
கிருஷ்ணகிரியில் நடந்த சிறப்பு மருத்துவ முகாமில் 93 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டையை கலெக்டர் சரயு வழங்கினார்.
மருத்துவ முகாம்
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமை மாவட்ட கலெக்டர் சரயு தொடங்கி வைத்தார் தொடர்ந்து 93 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்கினார்.
அப்போது கலெக்டர் பேசியதாவது:-
கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஏற்கனவே ஓசூரில் முகாம் நடைபெற்றது. இன்று (நேற்று) 2-வது கட்டமாக கிருஷ்ணகிரியில் முகாமில் 224 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். இதில், 93 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
பரிசோதனை
மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்க விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. முகாமில், எலும்பு முறிவு, மனநல மருத்துவம், கண் மருத்துவம், காதுமூக்கு தொண்டை மருத்துவம், நரம்பியல் மருத்துவம், பொதுமருத்துவம், கண், காது பரிசோதனை குறித்து சிறப்பு மருத்துவர்கள் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.