ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த 900 காளைகள்; 50 பேர் காயம்
புதுக்கோட்டையில் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 900 காளைகள் சீறிப்பாய்ந்தன. இதில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் 50 பேர் காயமடைந்தனர். கண்மாயில் தண்ணீரில் மூழ்கிய ஒரு காளை இறந்தது.
ஜல்லிக்கட்டு
புதுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழாவையொட்டி கவிநாடு கண்மாய் திடலில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து காளைகளை அதன் உரிமையாளர்கள் அழைத்து வந்திருந்தனர்.
மொத்தம் 900 காளைகள் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டிருந்தன. இதேபோல மாடுபிடி வீரர்களும் 300 பேர் பதிவு செய்திருந்தனர். ஜல்லிக்கட்டு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ஜல்லிக்கட்டை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டுக்கான உறுதிமொழியை எடுத்தனர்.
போட்டிப்போட்டு அடக்கினர்
வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதனை மாடுபிடி வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. தொடர்ந்து காளைகள் வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டன. இதில் காளைகள் சீறிப்பாய்ந்தன. இதனை மாடுபிடி வீரர்கள் போட்டிப்போட்டு அடக்கினர். ஒவ்வொரு சுற்றுவாரியாக மாடுபிடி வீரர்கள் களத்தில் அனுமதிக்கப்பட்டனர். இதில் காளைகள் மாடுபிடி வீரர்களிடம் சிக்காமல் பாய்ந்தோடியது. மேலும் களத்தில் நின்று சுத்தி, சுத்தி வந்து மாடுபிடி வீரர்களை விரட்டியது. சில காளைகளின் பெயர்களை கேட்டும், காளைகளின் தோற்றத்தையும் பார்த்து மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்காமல் ஒதுங்கி பேரிகார்டில் ஏறி நின்றதை பார்க்க முடிந்தது.
ரொக்கப்பரிசு
போட்டியில் காளைகளை பிடித்தால் ரூ.10 ஆயிரம், ரூ.50 ஆயிரம், 2 பவுன் தங்கச்சங்கிலி, எல்.இ.டி. டி.வி. என காளைகளின் உரிமையாளர்கள் அறிவித்தனர். ஆனால் அப்படி அறிவிக்கப்பட்ட காளைகளை மாடுபிடி வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. காளைகளும் வீரர்களிடம் சிக்காமல் சீறிப்பாய்ந்தது. காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், சிறந்த காளைகளின் உரிமையாளர்களுக்கும் ரொக்க பரிசுகள் மற்றும் குக்கர், எவர்சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இந்த நிலையில் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் அனைத்தும் வெளியேறும் பகுதியில் காளைகளின் உரிமையாளர்கள் தரப்பில் அதனை சரியாக கயிற்றால் பிடிக்காததால் அவை களத்திற்கு வெளியே வாகனங்கள் மற்றும் பார்வையாளர்கள் நின்ற இடம் நோக்கி பாய்ந்தது.
தண்ணீரில் மூழ்கி காளை சாவு
இதேபோல ஏராளமான காளைகள் அருகில் உள்ள கண்மாயில் தண்ணீருக்குள் பாய்ந்தோடியது. அதனை காளைகளின் உரிமையாளர்கள் பின்தொடர்ந்து பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. அவை தண்ணீரில் சென்று கொண்டே இருந்தது. இவ்வாறு சென்றதில் ஒரு காளை தண்ணீரில் மூழ்கி இறந்தது.
இதனை தீயணைப்பு வீரர்களும், அந்த காளையின் உரிமையாளர் தரப்பை சேர்ந்தவர்களும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இறந்த அந்த காளையின் உரிமையாளர் வெட்டன்விடுதியை சேர்ந்த சந்திரன் என தெரியவந்தது. இதேபோல தண்ணீருக்குள் சென்ற மற்றொரு காளையும் இறந்திருக்கலாம் என கருதப்பட்டது. ஆனால் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை.
திடீரென நிறுத்தம்
இதற்கிடையில் வாடிவாசலில் இருந்து வெளியே பாய்ந்தோடும் காளைகள் தண்ணீருக்குள் சென்றதால், ஜல்லிக்கட்டு சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. தீயணைப்பு படை வீரர்களும் ரப்பர் படகுகளை கொண்டு வந்து தண்ணீருக்குள் சென்ற காளைகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். சிறிது நேரத்திற்கு பிறகு மீண்டும் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதன்பின் ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெற்றது. மாலை 3.50 மணி அளவில் ஜல்லிக்கட்டு நிறைவு பெற்றது. இந்த ஜல்லிக்கட்டில் 900 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை அடக்க முயன்ற மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள், காளைகளின் உரிமையாளர்கள் என மொத்தம் 50 பேர் காயமடைந்தனர். இதில் 6 பேர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பார்வையாளர்கள்
ஜல்லிக்கட்டையொட்டி பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். முதல் உதவி சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவக்குழுவினர் பணியாற்றினர். முன்னதாக தொடக்க நிகழ்ச்சியில் இந்திய கால்நடை நல வாரிய ஜல்லிக்கட்டு ஆய்வுக் குழுத் தலைவர் மற்றும் கண்காணிப்பு அலுவலர் எஸ்.கே.மிட்டல், இந்திய கால்நடை நல வாரிய ஜல்லிக்கட்டு ஆய்வுக் குழு உறுப்பினர் டாக்டர் அயூப்கான், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டை ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் திரண்டு கண்டு களித்தனர். கவிநாடு கண்மாய் கரை மற்றும் மதகுகள் பகுதிகளிலும், லாரி, சரக்கு வேன்களில் நின்றபடியும், கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ரசிகர்கள் பார்த்து ரசித்தனர். சிலர் குடைகளை பிடித்தபடி ஜல்லிக்கட்டை பார்த்து ரசித்தனர்.