அரவை மில்லில் பதுக்கி வைத்திருந்த 9 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
மாத்தூரில் மாவு அரவை மில்லில் பதுக்கி வைத்திருந்த 9 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ரேஷன் அரிசி
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் இலவச அரிசியுடன் கடந்த ஒரு வருடமாக கொரோனா நிவாரணமாக கூடுதலாக அரிசி வழங்கப்பட்டு வருகிறது. உதாரணமாக 4 நபர்கள் கொண்ட ஒரு குடும்ப அட்டைக்கு தமிழக அரசு தலா 5 கிலோ வீதம் வழங்கும் அரிசியுடன் மேலும் 5 கிலோ சேர்த்து மாதத்திற்கு 4 நபர்களுக்கு 40 கிலோ அரிசி வழங்கப்பட்டு வருகிறது.
கிராமப்புறங்களில் உள்ள ரேஷன் கடைகளில் வழங்கப்படும் இந்த அரிசியானது பல்வேறு பகுதியில் தரமாக வழங்கப்படாததால் அவற்றை வாங்கும் பொதுமக்களில் பலர் கால்நடை வளர்ப்போர் அரிசியை மாவாக அரைத்து கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தி வருகின்றனர்.
கால்நடைகளுக்கு தீவனம்
கால்நடை இல்லாதவர்கள் தாங்கள் வாங்கிய அரிசியை வீட்டில் இருப்பு வைத்துள்ளனர். அதை பயன்படுத்தி கடந்த ஒரு வருடமாக விராலிமலை, குளத்தூர், இலுப்பூர் தாலுகா உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள கிராமங்களுக்கு பல்வேறு நபர்கள் காலை மற்றும் இரவு நேரங்களில் சென்று ரேஷன் அரிசி இருப்பு வைத்துள்ள நபரிடம் கிலோ ரூ.5 க்கு வாங்கி செல்கின்றனர். பின்னர் அவற்றை அவர்கள் பல்வேறு பகுதிகளில் ஏஜெண்டாக உள்ள அரவை மில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். அவர்கள் அதை வாங்கி மாவாக அரைத்து மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளுக்கு தீவனமாக விற்பனை செய்து வருகின்றனர்.
அதிரடி சோதனை
இந்நிலையில் விராலிமலை ஒன்றியம் மாத்தூர் போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள கைனாங்கரை பகுதியில் ரேஷன் அரிசிகளை விற்பனைக்கு வாங்கி மாவாக அரைத்து விற்கும் மாவு மில் ஒன்று அந்த பகுதியில் இயங்கி வருவதாக மாத்தூர் கிராம நிர்வாக அலுவலர் ஜோதி பிரகாசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அவர் அளித்த தகவலின் படி குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு மண்டல சூப்பிரண்டு சுஜாதா தலைமையில், துணை போலீஸ் சூப்பிரண்டு சுதர்சன், குளத்தூர் தாசில்தார் சக்திவேல், வட்ட வழங்க அலுவலர் உமா மகேஸ்வரி உள்ளிட்டவர்கள் அங்கு நேற்று மாலை 3 மணியளவில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
9 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
அப்போது அதிகாரிகளை கண்டதும் அரவை மில் ஊழியர்கள் மற்றும் உரிமையாளர் ஆகியோர் அரவை மில்லில் இருந்து தப்பி ஓட்டம் பிடித்தனர். அப்போது அரிசியை ஏற்றிகொண்டு ஆம்னி வேன் ஒன்று அரிசியுடன் வந்தபோது அதிகாரிகளை கண்டதும் ஆம்னி வேனை அங்கேயே விட்டுவிட்டு ஒரு பெண் உள்ளிட்ட 3 பேர் தப்பி ஓடினர். தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய ஆய்வில் ரேஷன் அரிசியை விற்பனைக்கு வாங்கி அரைத்து மாவாக விற்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த 9 டன் ரேஷன் அரிசி மற்றும் மாவு மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.