சரக்கு ஆட்டோவில் கடத்தப்பட்ட 9½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்

சரக்கு ஆட்டோவில் கடத்தப்பட்ட 9½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்

Update: 2022-12-04 18:53 GMT

தஞ்சை அருகே கோழிப்பண்ணைக்கு கொண்டு செல்வதற்காக சரக்கு ஆட்டோவில் கடத்தப்பட்ட 9½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேர்கைது செய்யப்பட்டனர். சரக்கு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

ரேஷன் அரிசி கடத்தல்

தஞ்சை மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தஞ்சை குடியுரிமை வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் முருகானந்தம், சப்-இன்ஸ்பெக்டர் விஜய் மற்றும் போலீசார் கும்பகோணம் அருகே மாணிக்க நாச்சியார்புரம் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

சரக்கு ஆட்டோவில் கடத்தல்

அப்போது புதர்கள் நிறைந்த பகுதியில் ஒரு சரக்கு ஆட்டோ நிற்பதை பார்த்தனர். உடனடியாக போலீசார் அங்கு சென்று பார்த்த போது சரக்கு ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்துவது தெரிய வந்தது. அந்த பகுதியில் உள்ள புதர்களில் இருந்து ரேஷன் அரிசி மூட்டைகளை எடுத்து வந்து லாரியில் ஏற்றி எடுத்துச்செல்ல முயன்றது தெரிய வந்தது.

உடனடியாக சரக்கு ஆட்டோவை போலீசார் மடக்கினர். மேலும் அங்கு இருந்த ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த பாலன் மகன் சுந்தரபாண்டியன் (வயது 27), ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அரண்மனை தெருவை சேர்ந்த பிரபாகரன் மகன் முத்துமணிகண்டன் (23), மதுரை தெற்கு வாசல் காமராஜர் தெருவை சேர்ந்த சித்திரை செல்வன் மகன் வீரபாண்டி (23) என்பது தெரிய வந்தது.

3 பேர் கைது

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 50 கிலோ எடை கொண்ட 188 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மொத்தம் 9 ஆயிரத்து 400 கிலோ ரேஷன் அரிசி மற்றும் சரக்கு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட சுந்தரபாண்டியன் சரக்கு ஆட்டோ உரிமையாளர் ஆவார்.

கைது செய்யப்பட்டவர்கள் திருப்பனந்தாள், கும்பகோணம் மற்றும் அரியலூர் மாவட்டத்தின் எல்லைப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, அதனை நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைக்கு தீவனத்துக்காக எடுத்துசெல்வது விசாரணையில் தெரிய வந்தது.

Tags:    

மேலும் செய்திகள்