சென்னையில் கார் டிரைவர் வங்கிக்கணக்கில் விழுந்த ரூ.9 ஆயிரம் கோடி

சென்னையில் கார் டிரைவரின் வங்கிக்கணக்கில் ரூ.9 ஆயிரம் கோடி விழுந்தது. ஒரே நொடியில் அவர் கோடீசுவரரான வினோதம் அரங்கேறி உள்ளது.

Update: 2023-09-22 00:24 GMT

சென்னை,

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் சென்னையில் வாடகை கார் ஓட்டி வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் கோடம்பாக்கத்தில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.

இவர் ஒரு தனியார் வங்கியில் கணக்கு வைத்து உள்ளார். அவரது வங்கிக்கணக்கில் வெறும் ரூ.105 மட்டுமே இருந்தது.

இந்த நிலையில் அவரது வங்கிக்கணக்கில் ரூ.9 ஆயிரம் கோடி போடப்பட்டு இருப்பதாக அவரது செல்போனுக்கு கடந்த 9-ந்தேதி குறுஞ்செய்தி ஒன்று வந்தது.

அதில் ஏராளமான பூஜ்ஜியங்கள் இருந்ததால் அது எவ்வளவு தொகை என்பது கூட அவரால் முதலில் புரிந்து கொள்ள முடியவில்லை.

ரூ.21 ஆயிரம் அனுப்பினார்

எனவே அது ஒரு போலி செய்தியாக இருக்கலாம் அல்லது யாராவது குறும்பு செய்வதற்காக அனுப்பி இருக்கலாம் என நினைத்தார்.

ஆனாலும் மீண்டும் அந்த செய்தியை பரிசோதித்தபோது, அது வங்கியின் அதிகாரப்பூர்வ எண்ணில் இருந்தே அனுப்பப்பட்டு இருந்தது.

இதனால் ராஜ்குமார் ஒருபுறம் அதிர்ச்சியடைந்தாலும், அதை பரிசோதிக்க எண்ணினார். அதன்படி தனது நண்பர் ஒருவரின் வங்கிக்கணக்குக்கு அதில் இருந்து ரூ.21 ஆயிரத்தை அனுப்பி வைத்தார்.

அப்போதுதான் தனது வங்கிக்கணக்கில் ரூ.9 ஆயிரம் கோடி டெபாசிட் செய்திருப்பது உண்மை என்பதை உணர்ந்து கொண்டார்.

ஒரு நொடியில் கோடீசுவரர்

அன்றாடம் கார் ஓட்டி செலவுகளை சமாளித்துக்கொண்டிருந்த தனக்கு இந்த ரூ.9 ஆயிரம் கோடியை அனுப்பியது யார்? ஒரு நொடியில் கோடீஸ்வரனாகியது எப்படி? என இன்ப அதிர்ச்சியில் மூழ்கியிருந்தார்.

ஆனால் அவரது மகிழ்ச்சி சில நிமிடங்களே நீடித்தது. பணம் போடப்பட்ட 30 நிமிடங்களில் அவரது வங்கிக்கணக்கில் மீதமிருந்த பணம் அனைத்தும் திரும்ப எடுக்கப்பட்டு விட்டது.

தனக்கு சொந்தமில்லாத பணம் திரும்ப எடுக்கப்பட்டதை எண்ணி மகிழ்ச்சி அடைந்தாலும், இதனால் எந்த பிரச்சினையும் ஏற்படுமோ? என்று அச்சத்தில் இருந்தார்.

தவறுதலாக அனுப்பியது

மறுநாள் காலையில் வங்கியில் இருந்து ராஜ்குமாருக்கு செல்போனில் அழைப்பு வந்தது. அதில் பேசிய அதிகாரி ஒருவர், அந்த பணம் தவறுதலாக அவரது வங்கிக்கணக்கில் போடப்பட்டு விட்டதாக தெரிவித்தார்.

பின்னர் சிறிது நேரத்தில் பேசிய மற்றொரு அதிகாரி, ராஜ்குமார் மீது போலீசில் புகார் செய்யப்போவதாக மிரட்டினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜ்குமார், வக்கீல் ஒருவருடன் தி.நகரில் உள்ள வங்கியின் கிளைக்கு சென்றார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இறுதியில் அந்த ரூ.9 ஆயிரம் கோடியில் இருந்து ராஜ்குமார் எடுத்த பணத்தை திரும்ப அளிக்கத் தேவை இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் புதிய கார் வாங்குவதற்கு கடன் வழங்கவும் அதிகாரிகள் முன் வந்தனர்.

இவ்வாறு அந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது. இதன் பிறகே அவர் பெருமூச்சு விட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்