கோவை
கோவையில் கத்தி முனையில் மிரட்டி பணம் பறித்த, 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
ரவுடிகள் கொலை
கோவையில் சத்தி பாண்டி (31) என்ற ரவுடியும், கோர்ட் அருகே கோகுல் என்ற வாலிபரும் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து கோவை மாநகரில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர்களை போலீசார் கண்காணித்து வருகின்றனர். 543 ரவுடிகள் கண்டறியப்பட்டு பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவையில் நேற்று போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது கத்தியுடன் சுற்றிய வழிப்பறி திருடர்கள் 9 பேரை பிடித்தனர். அவர்கள் விவரம வருமாறு:-
வழிப்பறி
கோவை செல்வபுரம் போலீசார் செல்வசிந்தாமணி குளம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த 3 பேர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் கத்தியுடன் வழிப்பறியில் ஈடுபட முயன்றது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் செல்வபுரம் தெலுங்குபாளையம் புதூரை சேர்ந்த கனகராஜ் (32), கோவை சொக்கம்புதூரை சேர்ந்த பிரதாப் (23), செல்வபுரம் தேவேந்திர தெருவை சேர்ந்த இந்திரகுமார் (26) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.அவர்களிடமிருந்து 3 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் மூன்று பேரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
பணம் பறித்தவர்
கிணத்துக்கடவு அரசு மரத்து வீதியை சேர்ந்தவர் ஆறுச்சாமி (55). இவர் கோவை அரசு கல்லூரி அருகே இளநீர் வியாபாரம் செய்து வருகிறார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர், அவரிடம் கத்தி முனையில் மிரட்டி அவரிடமிருந்த 300 ரூபாயை பறித்து சென்றார். இதுகுறித்து ஆறுச் சாமி ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதில் பணம் பறித்தது கோவை ரத்தினபுரி காந்தி நகரை சேர்ந்த கிரைம் அருண்குமார் (வயது 27)என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கத்திமுனையில் மிரட்டல்
கோவை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் ரமேஷ் குமார் (42). இவர் சிக்கன் கடை வைத்துள்ளார்.இவர் புலியகுளம் எரிமேடு ஜங்ஷன் பகுதியில் தனது நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் கத்தி முனையில் மிரட்டி அவரிடமிருந்து 1500 ரூபாயை பறித்துக்கொண்டு சென்று விட்டார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் பணம்பறித்த புளியகுளம் சிறுகாளியம்மன் தெருவை சேர்ந்த பிரதீப் குமார் (24), என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.