காட்டுப்பகுதியில் தேன் எடுத்த 9 பேருக்கு அபராதம்
தண்டராம்பட்டு அருகே காட்டுப்பகுதியில் தேன் எடுத்த 9 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தண்டராம்பட்டு
தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் அணை வனவர் சியாமளா, வனக்காப்பாளர்கள் அருள்மொழி, வெங்கடேசன், சக்திவேல், திலகவதி ஆகியோர் தென் முடியனூர் பூமலை காட்டுப்பகுதியில் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது வனப்பகுதியில் வாலிபர்கள் சுற்றி திரிந்தனர்
இதை பார்த்த வனத்துறையினர் அவர்களை சுற்றி வளைத்து விசாரித்த போது. இளையாங்கன்னி கிராமத்தைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ் (வயது 40), குழந்தை (26), ஜான் பீட்டர் (28), அந்தோணி ராஜ் (25), அலெக்சாண்டர் (38), ஏசுதாஸ் (37) உள்பட 9 பேர் வனப்பகுதியில் தேன் எடுத்துக் கொண்டு வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து வனப்பகுதியில் தேன் எடுத்த குற்றத்திற்காக 9 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து அவர்களிடம் இருந்து ரூ.90 ஆயிரத்தை வனத்துறையினர் வசூலித்தனர்.