பட்டாக்கத்தியுடன் சுற்றித்திரிந்த 9 பேர் கைது

பட்டாக்கத்தியுடன் சுற்றித்திரிந்த 9 பேர் கைது

Update: 2023-01-13 18:45 GMT

கருமத்தம்பட்டி

கருமத்தம்பட்டி அருகே பட்டாக் கத்தியுடன் சுற்றித்திரிந்த 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

பரபரப்பு

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை அடுத்த சங்கோதிபாளையம், செல்லப்பம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் பட்டாக் கத்திகளுடன் கதவுகளை தட்டியும், ஓட்டை பிரித்து உள்ளே இறங்கியும், பணம், செல்போன்களை பறித்து சென்ற சம்பவம் கடந்த 3 நாட்களாக மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் அறிந்த கோவை மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில், கருமத்தம்பட்டி போலீஸ் துணை கண்காணிப்பாளர் ஆனந்த் ஆரோக்கிய ராஜ் மேற்பார்வையில் கருமத்தம்பட்டி இன்ஸ்பெக்டர் ராஜதுரை தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

சுற்றி வளைப்பு

இந்த நிலையில் தனிப்படை போலீசார், சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் கண்டறிந்தனர். இதனை தொடர்ந்து அவர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தகவலின் பேரில் பவானிசாகரில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் இருந்து 3 பேரையும், அதனை தொடர்ந்து சத்தியமங்கலத்தில் 2 பேரையும், புளியம்பட்டியில் 4 பேரையும் என 9 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர்கள் பி. திரோஷன் (எ) சூர்யா (வயது23), விஜயராஜ் (22), ரோகித் (20), வாஞ்சிநாதன் (19), திருமலை (23) ,கார்த்தி (20) மற்றும் 3 பேர் இளஞ்சிறார்கள் என்பதும் தெரியவந்தது. 9 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பறிமுதல்

அவர்களிடம் இருந்து 3 இருசக்கர வாகனங்கள், 3 பட்டா கத்திகள் மற்றும் 15 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இவர்கள் வேறு ஏதேனும் குற்ற சம்பவங்களில் தொடர்புடையவர்களா? என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த கும்பலுடன் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்