மதுரை சிறை அதிகாரிகள் உள்பட 9 பேர் இடமாற்றம்

பல கோடி ரூபாய் ஊழல் புகார் எழுந்த நிலையில், மதுரை மத்திய சிறை அதிகாரிகள், காவலர்கள் என 9 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2022-12-07 19:29 GMT

பல கோடி ரூபாய் ஊழல் புகார் எழுந்த நிலையில், மதுரை மத்திய சிறை அதிகாரிகள், காவலர்கள் என 9 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பல கோடி ரூபாய் ஊழல் புகார்

மதுரை மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என 1,800-க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டு உள்ளனர். இங்குள்ள கைதிகள் அவர்களின் திறமைக்கு ஏற்ப பல்வேறு தொழில்களில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். மேலும் கைதிகள் மூலம் மருத்துவ பேண்டேஜ் துணி, ஆபீஸ் கவர், பேக்கரி உணவு பொருட்கள், இனிப்பு வகை உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. அவற்றை விற்பதன் மூலம் சிறை நிர்வாகத்துக்கும், கைதிகளுக்கும் வருமானம் கிடைத்து வருகிறது.

இந்த பொருட்களை வெளிச்சந்தையில் விற்பனை செய்ததில் பல கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்ததாக சில மாதங்களுக்கு முன்பு வக்கீல் ஒருவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆனாலும் அது தொடர்பான எவ்வித அறிக்கையும் நிர்வாகத்தில் இருந்து தெரிவிக்கப்படவில்லை. மேலும் அந்த புகார் ஆதாரபூர்வமாக நிருபிக்கப்படாத நிலையில் சிறையில் அதிகாரிகளால் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஒரு சில மோசடி நடந்தது உண்மை என்பது தெரியவந்ததில் அங்கு பணிபுரியும் சிலரிடம் அது தொடர்பான பணத்தையும் சிறை நிர்வாகம் பிடித்தம் செய்ததாக கூறப்படுகிறது.

9 பேர் இடமாற்றம்

சிறைத்துறை டி.ஜி.பி. அமரேஸ் பூஜாரி, மதுரை மத்திய சிறையில் ஆய்வு மேற்கொண்டார். அவரும் இது குறித்து விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சிறையில் பணியாற்றிய 9 பேரை வெவ்வேறு சிறைகளுக்கு இடமாற்றம் செய்து சிறைத்துறை டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.

மதுரை மத்திய சிறை அலுவலக கண்காணிப்பாளர் மகேஸ்வரி, அலுவலக மேலாளர் சித்திரவேல் ஆகியோர் சென்னை புழல் சிறைக்கும், பேக்கிங் பிரிவு கிளார்க் கதிரவன் புதுக்கோட்டை மாவட்ட சிறைக்கும், உதவியாளர் முத்துலட்சுமி சேலம் சிறைக்கும், ரிக்கார்டு கிளார்க் தங்கதாமஸ் மற்றும் சிறை காவலர்கள் ராமசாமி, தேவராஜ், காளிமுத்து, ஜெகதீஸ்வரன் என 9 பேர் உடனடியாக வெவ்வேறு சிறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு்ள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் 3 உயர் அதிகாரிகளும் இடமாற்றப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்