நாகர்கோவிலில் அதிகபாரம் ஏற்றி வந்த 9 லாரிகளுக்கு அபராதம்
நாகர்கோவிலில் அதிகபாரம் ஏற்றி வந்த 9 கனரக வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் அதிகபாரம் ஏற்றி வந்த 9 கனரக வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.
கனரக வாகனங்கள்
குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு கனிம வளங்கள் கனரக வாகனங்களில் கொண்டு செல்லப்படுகின்றன. அதில் அனுமதிக்கப்பட்ட அளவை விட வாகனங்களில் அதிகபாரம் ஏற்றி செல்லும் கனரக வாகனங்களை கண்காணித்து போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் அபராதம் மற்றும் பறிமுதல் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அதேசமயம் கனரக வாகனங்களால் குமரி மாவட்டத்தில் பல்வேறு விபத்துக்களும் ஏற்படுகின்றன. இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவின் பேரில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.
போலீசார் சோதனை- அபராதம்
அதன்படி நாகர்கோவில், அஞ்சுகிராமம், ஆரல்வாய்மொழி, களியக்காவிளை, தக்கலை பகுதிகளில் தினமும் போலீசாரும், அதிகாரிகளும் அதிரடி சோதனை மேற்கொண்டு அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்களை பறிமுதல் செய்வதுடன் அபராதமும் விதித்து வருகிறார்கள்.
நாகர்கோவில் மாநகரப் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் அந்த வழியாக வந்த லாரிகளை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். கோட்டார் பகுதியில் நடந்த சோதனையில் அதிக பாரம் ஏற்றி வந்த 9 லாரிகள் சிக்கியது. பிடிபட்ட லாரிகள் கோட்டார் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அந்த லாரிகள் அனைத்தும் கோட்டார் போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தப்பட்டுள்ளது. பின்னர் அபராதமும் விதிக்கப்பட்டது.