சென்னை குடிநீர் ஏரிகளில் 9 மாதத்திற்கு தேவையான தண்ணீர் இருப்பு - அதிகாரிகள் தகவல்

சென்னை குடிநீர் ஏரிகளில் 9 மாதத்திற்கு தேவையான தண்ணீர் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2023-10-11 08:16 GMT

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11. 757 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்கலாம். கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக குடிநீர் எரிகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக 35 அடி உயரம் உள்ள பூண்டி ஏரியில் நீர் இருப்பு 34 அடி எட்டியது. அதே போல் 24 அடி உயரமுள்ள செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 22 அடியை தாண்டியது. இதை தொடர்ந்து பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது. நேற்று காலை நிலவரப்படி குடிநீர் வழங்கும் 5 ஏரிகளிலும் மொத்தம் 9.817 டி. எம். சி. தண்ணீர் இருப்பு உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 83 சதவீதமாகும்.

இந்த தண்ணீரை சென்னை குடிநீருக்கு தட்டுப்பாடின்றி 9 மாதத்திற்கு வினியோகம் செய்ய முடியும். பருவமழை தொடங்குவதற்கு முன்பே குடிநீர் ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் இருப்பதால் அடுத்த ஆண்டு சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குடிநீர் ஏரிகளில் சோழவரம் ஏரியில் மட்டும் 50 சதவீதத்திற்கு கீழ் தண்ணீர் உள்ளது. மற்ற ஏரிகளில் அனைத்திலும் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. சிறிய ஏரியான கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை ஏரி 96 சதவீதம் நிரம்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.

புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3.300 டி.எம்.சி. ஆகும். இதில் 2.430 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 325 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது 189 கன அடி தண்ணீர் குடிநீர் தேவைக்காக வெளியேற்றப்படுகிறது.

சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1.081 டி.எம்.சி ஆகும். இதில் 498 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 22 கன அடி வீதம் தண்ணீர் வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3.645 டி.எம்.சி.யில் 3.123 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 156 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

உபரிநீராக வினாடிக்கு 100 கன அடி வீதமும், குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 237 கன அடியும் வெளியேற்றப்படுகிறது. பூண்டி ஏரியில் மொத்த கொள்ளளவான 231 டி.எம்.சி.யில் 2.589 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 180 கன அடி தண்ணீர் வருகிறது. 550 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கண்ணன் கோட்டை - தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கனஅடியில் 480 மில்லியன் கன அடி நீர் நிரம்பி காணப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்