உண்டியல் காணிக்கை மூலம் ரூ.9 லட்சம் வருவாய்
வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.9 லட்சம் வருவாயாக கிடைத்தது.
தேனி அருகே வீரபாண்டியில் பிரசித்தி பெற்ற கவுமாரியம்மன் கோவில் உள்ளது. தேனி மாவட்டத்தின் முதன்மை கோவிலாக விளங்கும் இந்த கோவிலில் வாரந்தோறும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜை நடைபெறும். மேலும் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் சித்திரை திருவிழா புகழ்பெற்றது. இந்த கோவிலில் 3 மாதங்களுக்கு ஒருமுறை நிரந்தர உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, ஜூன் மாதம் நிரந்தர உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்பட்டது.
இந்தநிலையில் 3 மாதங்களுக்கு பிறகு நேற்று கோவிலில் உள்ள 6 நிரந்தர உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதற்கு இந்துசமய அறநிலைத்துறை உதவி ஆணையர் கலைவாணன் தலைமை தாங்கினார். காணிக்கை எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் ஈடுபட்டனர். காணிக்கை எண்ணும் பணி முடிவில், ரூ.9 லட்சத்து 12 ஆயிரத்து 940 வருவாயாக கிடைத்தது. இதுதவிர 26 கிராம் தங்கம், 59 கிராம் வெள்ளி ஆகியவை காணிக்கையாக கிடைத்தது. இதில், அறநிலையத்துறை ஆய்வாளர் தியாகராஜன், கோவில் செயல் அலுவலர் மாரிமுத்து, மேலாளர் பாலு, கணக்காளர் பழனியப்பன் மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.