36 பயனாளிகளுக்கு ரூ.9¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

Update: 2023-08-15 18:45 GMT

திருவாரூரில் நடந்த சுதந்திர தின விழாவில் 36 பயனாளிகளுக்கு ரூ.9¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாருஸ்ரீ வழங்கினார்.

சுதந்திர தின விழா

திருவாரூர் கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

அப்போது போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உடனிருந்தார். பின்னர் உலக சமாதானத்தை வலியுறுத்தி வெள்ளை புறாக்கள் பறக்க விடப்பட்டன.

நலத்திட்ட உதவிகள்

இதனை தொடர்ந்து சிறப்பாக பணிபுரிந்த அரசு அனைத்துத்துறையை சேர்ந்த 200 அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

பின்னர் முன்னாள் படைவீரர் நலத்துறையின் கீழ் ஒருவருக்கு ரூ.25 ஆயிரமும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் ரூ.12 ஆயிரத்து 552, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் ரூ.1 லட்சத்து 22 ஆயிரத்து 520, மாற்றுதிறனாளிகள் நலத்துறையின் கீழ் ரூ.1 லட்சத்து 74 ஆயிரத்து 500, தாட்கோ மூலம் ரூ.5 லடசத்து 47 ஆயிரத்து 100 உள்பட மொத்தம் 36 பேருக்கு ரூ.9 லட்சத்து 89 ஆயிரத்து 968 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

கலைநிகழ்ச்சிகள்

அதனை தொடர்ந்து சுதந்திர தின விழாவில் கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நெடும்பலம் அரசு மேல்நிலைப்பள்ளி, கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, உள்ளிக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, திருமக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, திருவாரூர் ஆர்.சி. பாத்திமா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளை சேர்ந்த 379 மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சந்திரா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பாலசந்திரன், உதவி கலெக்டர்கள் சங்கீதா, கீர்த்தனாமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்