பிளஸ்-1 பொதுத்தேர்வில் 88.62 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி

பிளஸ்-1 பொதுத்தேர்வில் சேலம் மாவட்டத்தில் 88.62 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் மாநில அளவில் 23-வது இடத்தை சேலம் மாவட்டம் பிடித்தது.

Update: 2022-06-27 20:01 GMT

பிளஸ்-1 பொதுத்தேர்வில் சேலம் மாவட்டத்தில் 88.62 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் மாநில அளவில் 23-வது இடத்தை சேலம் மாவட்டம் பிடித்தது.

பிளஸ்-1 பொதுத்தேர்வு

தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை இந்த தேர்வை 325 மேல்நிலைப்பள்ளிகளில் படித்த 19 ஆயிரத்து 254 மாணவர்கள், 20 ஆயிரத்து 227 மாணவிகள் என மொத்தம் 39 ஆயிரத்து 481 பேர் எழுதினர்.

இந்த நிலையில் நேற்று பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவு வெளியானது. இதில் சேலம் மாவட்டத்தில் 15 ஆயிரத்து 879 மாணவர்கள், 19 ஆயிரத்து 109 மாணவிகள் என மொத்தம் 34 ஆயிரத்து 988 பேர் தேர்ச்சி பெற்றனர்.

இதன் மூலம் மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதம் 88.62 ஆகும். கடந்த 2020-ம் ஆண்டு நடந்த பிளஸ்-1 பொதுத்தேர்வில் 95.71 சதவீத பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2020-ம் ஆண்டை ஒப்பிடுகையில் இந்தாண்டு தேர்ச்சி சதவீதம் 7.09 வரை குறைவாகும்.

23-வது இடம் பிடித்தது

இதில் 82.47 சதவீத மாணவர்களும், 94.47 சதவீத மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் தேர்ச்சி 12 சதவீதம் வரை அதிகமாகும். பிளஸ்-1 பொதுத்தேர்வில் மாநில அளவில் சேலம் மாவட்டம் 23-வது இடத்தை பிடித்துள்ளது.

மாவட்டத்தில் 325 பள்ளிகளில் 114 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. கடந்த 2020-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்வில் 105 பள்ளிகள் மட்டுமே 100 சதவீத தேர்ச்சி பெற்றிருந்தன.

முன்னதாக காலையில் பிளஸ்-1 தேர்வு முடிவுகள் 325 பள்ளிகளிலும் வளாகத்தில் உள்ள அறிவிப்பு பலகையில் மதிப்பெண் பட்டியலுடன் ஒட்டப்பட்டன. தற்போது பிளஸ்-2 படித்து வரும் மாணவ, மாணவிகள் தங்களுடைய பிளஸ்-1 மதிப்பெண் விவரங்களை ஆர்வமுடன் பார்த்தனர். பின்னர் அவர்கள் தேர்வில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியை தங்களது சக வகுப்பு நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டனர். மேலும் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர், ஆசிரியைகள் வாழ்த்து தெரிவித்தனர்.

மாற்றுத்திறனாளிகள்

மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வை 256 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் எழுதினர். இதில் 222 பேர் தேர்ச்சி அடைந்தனர். தேர்ச்சி சதவீதம் 86.71 ஆகும். கடந்த 2020-ம் ஆண்டில் 94.54 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்