மதுரை ரெயில் நிலைய மேம்பாட்டு திட்டப்பணிக்கு ரூ.85 கோடி

ரெயில் நிலையங்கள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மதுரை ரெயில் நிலையத்துக்கு முதற்கட்டமாக ரூ.85 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. டெண்டர் இறுதி செய்யப்பட்டவுடன் பணிகள் தொடங்க உள்ளன.

Update: 2022-09-09 20:23 GMT

ரெயில் நிலையங்கள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மதுரை ரெயில் நிலையத்துக்கு முதற்கட்டமாக ரூ.85 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. டெண்டர் இறுதி செய்யப்பட்டவுடன் பணிகள் தொடங்க உள்ளன.

ரெயில் நிலைய மேம்பாடு

மத்திய அரசின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரெயில்வேயில் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த ரெயில் நிலையங்களை மேம்படுத்தும் திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. இந்த திட்டத்தில் நாடு முழுவதும் 41 ரெயில் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அதில், முதல்கட்டமாக தென்னக ரெயில்வேக்கு உட்பட்ட தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் உள்ள மதுரை, ராமேசுவரம், கன்னியாகுமரி, புதுச்சேரி, எர்ணாகுளம், கொல்லம் ஆகிய ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன.

இந்தநிலையில், மத்திய பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது. இதில், மேம்படுத்தப்படும் ரெயில் நிலையங்களுக்கு ரூ.1200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதி தொகுப்பில் தமிழகத்தில் உள்ள மதுரை, கன்னியாகுமரி மற்றும் பாண்டிச்சேரி ரெயில் நிலையங்கள் இடம் பெற்றன. மதுரை ரெயில் நிலையத்தை பொறுத்தமட்டில், ரெயில் நிலையத்தின் முகப்பு பகுதி விமான நிலைய முகப்பு போல மாற்றம் செய்யப்பட உள்ளது. அத்துடன், கார், இருசக்கர வாகன நிறுத்தும் இடங்களும் புதிதாக கட்டப்பட உள்ளன. இதற்கான திட்டம் கட்டுமான பிரிவு துணைத்தலைமை என்ஜினீயர்களால் தயாரிக்கப்பட்டு, கோட்ட மேலாளரின் பரிந்துரையுடன் ரெயில்வே வாரியத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

புதிய நடைமேம்பாலம்

மதுரை ரெயில் நிலையத்தில் உள்ள பழைய மற்றும் புதிய நடைமேம்பாலங்களுக்கு இடையே, 72 மீட்டர் அதாவது 230 அடி அகலத்தில் புதிய நடைமேம்பாலம் கட்டப்படவுள்ளது. இந்த மேம்பாலம் 1-வது பிளாட்பாரத்தில் இருந்து 6-வது பிளாட்பாரத்தை இணைக்கும் வகையில் கட்டப்படும். விமானநிலையங்களில் இருப்பது போல, பயணிகள் ரெயில் நிலையத்திற்குள் வருவதற்கு ஒரு பாதையும், வெளியே செல்வதற்கு ஒரு பாதையும் அமைக்கப்படும். முதல் தளத்தில் பயணிகள் காத்திருக்கும் இடம் கட்டப்படும்.

கிழக்கு நுழைவுவாயில் பகுதியில் 3 அடுக்கு இருசக்கர வாகன நிறுத்துமிடம், கார் நிறுத்துமிடம் கட்டப்படுகிறது. மேற்குநுழைவுவாயில் பகுதியில் தரைத்தளத்துடன் கார் நிறுத்துமிடம் கட்டப்படுகிறது. இந்த பணிகளுக்காக கிழக்கு நுழைவுவாயில் பகுதியில் திண்டுக்கல் செல்லும் வழியில் உள்ள அனைத்து கட்டிடங்களும் முதற்கட்டமாக இடிக்கப்பட உள்ளன. அங்குள்ள அலுவலகங்கள் அனைத்தும் மாற்று இடத்தில் தற்காலிகமாக செயல்படும்.

பணிகள் தொடங்கும்

அத்துடன், அங்கு மல்டிலெவல் கார் நிறுத்தும் வாகன காப்பகம் கட்டப்படும். 2-வது கட்டமாக விருதுநகர் செல்லும் பாதையில் உள்ள கட்டிடங்கள் அனைத்தும் இடிக்கப்படுகிறது. எல்லீஸ்நகர் பாலத்தின் அருகில் உள்ள துணைமின் நிலையம் 3 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் விரிவுபடுத்தப்படுகிறது. அதேபகுதியில் புதிய பார்சல் அலுவலகம் நவீன வசதிகளுடன் கட்டப்படுகிறது. மேற்குநுழைவுவாயில் பகுதியில் உள்ள 6-வது பிளாட்பாரம் 9 மீட்டர் அகலத்தில் விரிவுபடுத்தப்படுகிறது. இந்த திட்டத்துக்கு சுமார் ரூ.350 கோடி செலவாகும்.

இதற்கிடையே, மதுரை ரெயில் நிலைய மேம்பாட்டுக்கு ரூ.85 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, திட்ட பணிக்கான டெண்டர் கடந்த மாதம் 18-ந் தேதி விடப்பட்டது. இதில் ரெயில்வேயின் துணை நிறுவனமான ஆர்.ஐ.டி.இ.எஸ்., (ரைட்ஸ்), தேசிய கட்டிட கட்டுமான நிறுவனம் (என்.பி.சி.சி.) உள்ளிட்ட 7 முன்னணி நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. நிதி மற்றும் தொழில்நுட்ப விவரங்கள் குறித்த ஆய்வு முடிந்த பின்னர் டெண்டர் சென்னையில் உள்ள தலைமை கட்டுமானப்பிரிவு என்ஜினீயர் அலுவலகத்தில் இறுதி செய்யப்படும். அதன்பின்னர் மதுரை ரெயில் நிலையத்தில் பணிகள் தொடங்கும்.

Tags:    

மேலும் செய்திகள்