மோர்தானா அணையிலிருந்து 844 கன அடி நீர் வெளியேறுகிறது

குடியாத்தம் மோர்தானா அணையில் இருந்து வினாடிக்கு 84 கன அடி நீர் வெளியேறுகிறது. இதனால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

Update: 2022-10-17 17:39 GMT

குடியாத்தம் மோர்தானா அணையில் இருந்து வினாடிக்கு 84 கன அடி நீர் வெளியேறுகிறது. இதனால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

நீர் மட்டம் உயர்வு

குடியாத்தம் அடுத்த மோர்தானா அணை சுமார் 11.50 மீட்டர் உயரமும், 261 மில்லியன் கன அடி கொள்ளளவும் கொண்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெய்த தொடர் மழையில் அணை நிரம்பி வழிந்தது. கடந்த ஏப்ரல் மாதம் கோடை காலம் என்பதால் அணையின் நீர்மட்டம் 5 சென்டிமீட்டர் அளவு குறைந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மோர்தானா அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான ஆந்திர மாநிலம் மதனப்பள்ளி, புங்கனூர், பலமநேர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த பலத்த மழையாலும், ஆந்திர மாநிலம் புங்கனூர் அடுத்த பெத்தபஞ்சாணி பகுதியில் உள்ள மாடிஏரி நிரம்பி வழிவதாலும் மோர்தனா அணைக்கு தண்ணீர் வரத்து திடீரென அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 6 சென்டி மீட்டர் அதிகரித்து நீர்மட்டம் 11.56 மீட்டராக உயர்ந்தது.

844 கனஅடி நீர் வெளியேறுகிறது

தற்போது வினாடிக்கு 844 கனஅடி தண்ணீர் வழிந்தோடியது. அதிக அளவு தண்ணீர் வழிந்தோடுவதை அறிந்த சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மோர்தானா அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் வருவாய்த் துறை, நீர்வளத் துறையினர் 24 மணி நேரமும் மோர்தானா அணையை கண்காணித்து வருகின்றனர்.

வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவின் பேரில் குடியாத்தம் உதவி கலெக்டர் வெங்கட்ராமன் மேற்பார்வையில் தாசில்தார் விஜயகுமார் உள்ளிட்ட வருவாய் துறையினர் மோர்தானா அணை நீர் செல்லும் கவுண்டன்ய மகாநதி கரைப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாலம் சாரமைப்பு பணிகளை ஆய்வு

தற்போது குடியாத்தம் கவுண்டன்யமகாநதி ஆற்றில் கெங்கையம்மன் கோவில் தரைப்பாலம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு வருகிறது. மோர்தானா அணையில் இருந்து அதிக அளவு நீர் வெளியேற்றப்பட்டதால் தரைப்பாலும் சீரமைக்கும் பணிகளை குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசு, பொறியாளர் சிசில் தாமஸ், நகர மன்ற உறுப்பினர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

கெங்கையம்மன் தரைப்பாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் போக்குவரத்து மாற்றம் செய்வது மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து குடியாத்தம் துணைபோலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் லட்சுமி, இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட போலீசார் ஆய்வு செய்தனர்.

குடியாத்தம் நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசு உத்தரவு பேரில் கவுண்டன்யா மகாநதி ஆற்றின் கரையோர பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு நகராட்சி ஊழியர்கள் ஒலிபெருக்கி மூலம் அறிவித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்