திருச்சி பிளஸ்-2 தேர்வில் மாவட்டத்தில் 84 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி
பிளஸ்-1 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் திருச்சி மாவட்டத்தில் 84 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. மேலும் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிளஸ்-1 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் திருச்சி மாவட்டத்தில் 84 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. மேலும் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
91.64 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி
பிளஸ்-1 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் திருச்சி மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வுகளை 260 பள்ளிகளை சேர்ந்த 15 ஆயிரத்து 760 மாணவர்களும், 16 ஆயிரத்து 990 மாணவிகளும் எழுதினர்.
நேற்று வெளியிடப்பட்ட தேர்வு முடிவில் 13 ஆயிரத்து 614 மாணவர்களும், 16 ஆயிரத்து 398 மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 91.64 சதவீதம். இதில் மாணவர்கள் 86.38 சதவீதம் பேரும், மாணவிகள் 96.52 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை 3 அரசு பள்ளிகள், 7 அரசு உதவி பெறும் பள்ளிகள், 13 பகுதி உதவி பெறும் பள்ளிகள், 61 மெட்ரிக் மற்றும் சுயநிதி பள்ளிகள் என 84 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று உள்ளன.
இதில் 590 மதிப்பெண்ணுக்கு மேல் 6 மாணவர்களும், 580 முதல் 589 வரை 47 மாணவர்களும், 570 முதல் 579 மதிப்பெண் வரை 75 மாணவர்களும், 560 மதிப்பெண் முதல் 569 மதிப்பெண் வரை 102 மாணவர்களும், 550 மதிப்பெண் முதல் 559 மதிப்பெண் வரை 164 மாணவர்களும் பெற்று உள்ளனர்.
100-க்கு 100 மதிப்பெண்கள்
இயற்பியல் பாடப்பிரிவில் 25 பேரும், வேதியியலில் 4 பேரும், உயிரியலில் 8 பேரும், கணினி அறிவியலில் 19 பேரும், கணிதத்தில் 28 பேரும், வணிகவியல் பாடப்பிரிவில் 25 பேரும், பொருளியல் பாடப்பிரிவில் 23 பேரும், கணக்கு பதிவியல் பாடப்பிரிவில் 50 பேரும், கணினி பயன்பாடுகள் பாடப்பிரிவில் 37 பேரும், வணிக கணிதம் மற்றும் புள்ளியியல் பாடப்பிரிவில் 7 பேரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இந்த தகவலை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி தெரிவித்துள்ளார்.
பிளஸ்-1 பொதுத்தேர்வில் தேர்ச்சி அடையாத மற்றும் தேர்வு எழுதாத, தனித்தேர்வர்கள், இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ஜூலை 6-ந்தேதி வரை துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். ஜூலை 1-ந்தேதி முதல் 11-ம் வகுப்பு மாணவர்கள், மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டலுக்கு ஜூன் 30-ந்தேதி முதல் ஆகஸ்டு 7-தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.