கூடங்குளம் அணுஉலைகள் மூலம் 82 ஆயிரம் மில்லியன் யூனிட் மின்உற்பத்தி
கூடங்குளம் அணுஉலைகள் மூலம் 82 ஆயிரத்து 82 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது என்று வளாக இயக்குனர் தெரிவித்து உள்ளார்.
வள்ளியூர்:
கூடங்குளம் அணுஉலைகள் மூலம் 82 ஆயிரத்து 82 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது என்று வளாக இயக்குனர் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனர் பிரேம்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:-
கூடங்குளம் அணுமின் நிலையம்
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதல் அணு உலையில் வருடாந்திர பராமரிப்பு பணி மற்றும் எரிபொருள் நிரப்பும் பணிகள் நடந்த நாட்கள் தவிர கடந்த 600 நாட்கள் தொடர்ந்து ஓடி சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் 14 ஆயிரத்து 114 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
மின் உற்பத்தி தொடங்கிய நாள் முதல் இதுவரை முதல் அணு உலையில் 52 ஆயிரத்து 665 மணி நேரம் செயல்பட்டு மொத்தம் 47 ஆயிரத்து 470 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
82 ஆயிரம் மில்லியன் யூனிட்
அதுபோல் 2-வது அணுஉலை மூலம் 34 ஆயிரத்து 573 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. மின் உற்பத்தி தொடங்கிய நாள் முதல் இதுவரை கூடங்குளம் 2 அணு உலைகளின் மூலம் மொத்தம் 82 ஆயிரத்து 43 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அமைக்கப்பட்ட அணு உலைகள் மற்ற நாடுகளில் உள்ள அணு உலைகளை விட பல்வேறு சிறப்பு பாதுகாப்பு அம்சங்கள் உள்ளது. இந்த அணு உலைகளில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்களால் சுற்றுச்சூழலுக்கும், பொதுமக்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.