மதுரை அருகே சக்குடியில் ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகள் -82 பேர் காயம்

மதுரை அருகே சக்குடியில் நேற்று விறுவிறுப்பாக ஜல்லிக்கட்டு நடந்தது. மாடுகள் முட்டியதில் 82 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2023-03-11 20:12 GMT


மதுரை அருகே சக்குடியில் நேற்று விறுவிறுப்பாக ஜல்லிக்கட்டு நடந்தது. மாடுகள் முட்டியதில் 82 பேர் காயம் அடைந்தனர்.

சக்குடி ஜல்லிக்கட்டு

மதுரை சிலைமான் அருகே உள்ள சக்குடியில் நேற்று ஜல்லிக்கட்டு விறுவிறுப்பாக நடந்தது. இதற்காக அங்குள்ள முப்பிலி சுவாமி கோவில் திடலில் வாடிவாசல் அமைக்கப்பட்டிருந்தது. முதலில், காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் தகுதி பெற்ற வீரர்களும், காளைகளும் மட்டுமே திடலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

ஜல்லிக்கட்டு தொடங்குவதற்கு முன்பாக, அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. போட்டியை அமைச்சர் மூர்த்தி, ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகரன், மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர், போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், விலங்குகள் நலவாரியதலைவர் மிட்டல் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

சீறிப்பாய்ந்த காளைகள்

முதலில் கோவில் காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. அவற்றை மாடுபிடி வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. அதன் பிறகு, வாடிவாசல் வழியாக ஜல்லிக்கட்டு காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. அவற்றை மாடுபிடி வீரர்கள் போட்டிப்போட்டு பிடித்தனர். சில காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு சவால் விடும் வகையில் சீறிப்பாய்ந்தன. அடங்காத காளைகளின் உரிமையாளர்களுக்கும், அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் செல்போன், சைக்கிள்கள், பட்டுச் சேலைகள், பாத்திரங்கள், பீரோ, கட்டில் போன்ற பரிசுகள் வழங்கப்பட்டன.

மாலை வரை நடந்த இந்த ஜல்லிக்கட்டு போட்டியில், ஆயிரம் காளைகள் முன்பதிவுசெய்திருந்த நிலையில் 893 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. மீதமுள்ள காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 493 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.

மாடுகள் முட்டியத்தில் பார்வையாளர்கள், மாடுபிடி வீரர்கள் என 82 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் 17 பேர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டனர்.

ஜல்லிக்கட்டு போட்டியை மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பல மாவட்டஙகளை சேர்ந்த ஏராளமானவர்கள் பார்த்து ரசித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்