3 மாணவிகளுக்கு ரூ.8.10 லட்சம் நிதியுதவி

Update: 2023-05-29 19:30 GMT

சென்னையில் உள்ள கல்லூரியில் உயர்க்கல்வி படிக்க செல்லும் 3 பள்ளி மாணவிகளுக்கு ரூ.8 லட்சத்து 10 ஆயிரம் நிதியுதவியை கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடந்தது. இதில், மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மனுக்களை அளித்தனர்.

முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, வங்கி கடன், கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், குடிநீர் வசதி, சாலை வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 421 மனுக்கள் வழங்கப்பட்டன.

இதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் வழங்கிய 18 மனுக்களை கலெக்டர் கார்மேகம் பெற்று, உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மாணவிகளுக்கு நிதியுதவி

சேலம் மாவட்டத்தில் 2022-2023-ம் கல்வி ஆண்டில் அரசு மாதிரிப் மேல்நிலை பள்ளியில் பிளஸ்-2 முடித்த மாணவிகள் செம்மொழி அரசி, சங்கீதா, சிவஷாலினி ஆகிய 3 பேரும் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உயர்க்கல்வி படிக்க உள்ளதாகவும், இதனால் தங்களுக்கு நிதியுதவி வழங்குமாறு கலெக்டர் கார்மேகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதையடுத்து அந்த கோரிக்கையின் அடிப்படையில் சேலம் கல்வி அறக்கட்டளை நிதியில் இருந்து 3 மாணவிகளுக்கும் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உயர்க்கல்வி படிக்க 3 ஆண்டுகளுக்கான கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் என மொத்தம் ரூ.8 லட்சத்து 10 ஆயிரத்திற்கான ஆணையை மாவட்ட கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.

இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார், உதவி கலெக்டர் (பயிற்சி) சங்கீத் பல்வந்த் வாகி, சப்-கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) மயில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்