சேலத்தில் உரிமையியல் நீதிபதி பதவிக்கான எழுத்து தேர்வை 807 பேர் எழுதினர்-மாவட்ட முதன்மை நீதிபதி நேரில் ஆய்வு

சேலத்தில் நடைபெற்ற உரிமையியல் நீதிபதி பதவிக்கான எழுத்து தேர்வை 807 பேர் எழுதினர். இந்த தேர்வை மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2023-08-19 18:45 GMT

உரிமையியல் நீதிபதி தேர்வு

உரிமையியல் நீதிபதி பதவியில் காலியாக உள்ள 245 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஜூன் மாதம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டது. தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த தேர்வுக்கு ஏராளமான வக்கீல்கள் விண்ணப்பித்தனர்.

இந்த நிலையில் உரிமையியல் நீதிபதி பதவிக்கான முதல்நிலை தேர்வு சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி உள்பட 9 மாவட்டங்களில் நேற்று காலை நடைபெற்றது. அதன்படி சேலம் கொண்டலாம்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்ட மையத்தில் இந்த தேர்வு நடந்தது.. இந்த மையத்தில் தேர்வை எழுத 858 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

807 பேர் எழுதினர்

இதனால் காலை 8 மணி முதலே ஏராளமானவர்கள் மையத்துக்கு வர தொடங்கினர். பின்னர் அவர்கள் அதிகாரிகளின் சோதனைக்கு பின்னர் தேர்வு மையத்துக்குள் அனுப்பி வைக்கப்பட்டனர். தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணி வரை நடைபெற்றது. இந்த தேர்வில் 807 பேர் கலந்து கொண்டு ஆர்வமுடன் எழுதினர். 51 பேர் தேர்வு எழுத வரவில்லை.

இதற்கிடையே தேர்வு மையத்துக்கு மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டனர். தேர்வு நடைபெற்றதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்