மீன் லாரியில் கடத்த முயன்ற 8 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கேரளாவுக்கு மீன் லாரியில் கடத்த முயன்ற 8 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-08-12 16:44 GMT

களியக்காவிளை:

கேரளாவுக்கு மீன் லாரியில் கடத்த முயன்ற 8 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ரகசிய தகவல்

குமரி-கேரள எல்லை பகுதிகளில் உள்ள சோதனைச்சாவடிகள் வழியாக ரேஷன் அரிசி, மண்எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் அதிகளவில் கேரளாவுக்கு கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுப்பதற்காக மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் வெளி மாவட்டங்களில் இருந்து கன்னியாகுமரி- திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக களியக்காவிளை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

8 டன் ரேஷன் அரிசி

அதைத்தொடர்ந்து  குமரி-கேரள எல்லை சோதனைச்சாவடியான களியக்காவிளையில் நேற்று அதிகாலையில் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கூண்டு அமைக்கப்பட்ட லாரி ஒன்று வேகமாக வந்தது. போலீசார் அந்த லாரியை தடுத்து நிறுத்தியபோது, அதில் இருந்த 2 பேர் மீன்கள் கொண்டு செல்வதாக கூறினர். ஆனால், சந்தேகமடைந்த போலீசார் லாரியை திறந்து பார்த்தனர்.

அப்போது, அதில் மூடை மூடையாக ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ேபாலீசார் லாரியுடன் 8 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

2 பேர் கைது

இதுதொடர்பாக லாரியில் இருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள், விளவங்கோடு பகுதியை சேர்ந்த கிவிங் (வயது 29), குளப்புறம் பகுதியைச் சேர்ந்த சுஜின் (26) என்பதும், ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை காப்புக்காடு அரசு குடோனிலும், லாரியை விளவங்கோடு தாசில்தார் அலுவலகத்திலும் ஒப்படைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்